17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‘ஆட்டோகிராப்’ கூட்டணி
17 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆட்டோகிராப்’ சேரன் - விஜய் மில்டன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் எதார்த்த படைப்பாக 2004-ம் ஆண்டு பெரும் வெற்றியடைந்த படம், ‘ஆட்டோகிராப்’. சேரன் இயக்கி நடித்த இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் சேரனுக்கு சினிமாவில் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. குறிப்பாக விஜய் மில்டனின் ஒளிப்பதிவு பெரிதும் பேசப்பட்டது. அதன்பின்னர் சேரனை போலவே விஜய் மில்டன் இயக்குனர் பாதையில் பயணித்தார். ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ‘10 எண்றத்துக்குள்ள’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்தநிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சேரன் - விஜய் மில்டன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. சேரன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் டுவிட்டர் வாழ்த்து செய்தி பெரும் கவனத்தை ஈர்த்தது.
அந்த வாழ்த்தில், ‘ஆட்டோகிராப் திரைப்படம் மூலமாக ஒளிப்பதிவாளனாக எனக்கொரு அடையாளத்தை உருவாக்கி, ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் வாயிலாக என் இயக்குனர் பயணத்தை தொடங்கி வைத்த சேரனுடன் என் அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பு விரைவில்’, என்று விஜய் மில்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் மீண்டும் சேரன் - விஜய் மில்டன் கூட்டணி இணையவுள்ளது உறுதியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.