சிவப்பழகு விளம்பரத்தில் நடித்து விட்டு நிறவெறியை நடிகைகள் எதிர்ப்பது வெட்க கேடு: கங்கனா ரணாவத் சாடல்
சிவப்பழகு விளம்பரத்தில் நடித்து விட்டு நிறவெறியை நடிகைகள் எதிர்ப்பது வெட்க கேடு என்று கங்கனா ரணாவத் சாடியுள்ளார்.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரின் கழுத்தை வெள்ளை போலீஸ்காரர் முட்டிக்காலால் நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனவெறியால் இந்த படுகொலையை நடத்தியதாக கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த கொலையை இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் கண்டித்தனர். இவர்கள் சிவப்பழகு கிரீம் விளம்பர படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடிகைகளை பிரபல நடிகை கங்கனா ரணாவத் சாடி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய நடிகர்-நடிகைகள் பலர் படங்களில் சிவப்பழகு கிரீம்களை விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் இப்போது வெட்கம் இல்லாமல் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு என்ன துணிச்சல் பாருங்கள். சிவப்பழகு விளம்பர நிறுவனங்களுடன் கோடிக்கணக்கில் பேசி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். இதை பற்றி யாரும் ஏன் கேட்பது இல்லை. இங்கு இனவெறி வேரூன்றி உள்ளது. சாதாரண ஒரு கதாபாத்திரத்துக்கு கூட கறுப்பான தோற்றம் கொண்டவரை நடிக்க வைக்க மறுத்து விடுகின்றனர். நான் எந்த முக அழகு விளம்பரத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனது சகோதரி மாநிறம். முகஅழகு விளம்பரத்தில் நடித்தால் அவரை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும்.
இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார். இவர் தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.