அன்று நடிகை.. இன்று வித்தியாசமான இயக்குனர்
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை மையமாககொண்ட சினிமாக்களை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார், நடிகை கீது மோகன்தாஸ்.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை மையமாககொண்ட சினிமாக்களை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார், நடிகை கீது மோகன்தாஸ். அவர் தனது முதல் குறும்படத்தில் பார்வையற்ற ஒரு சிறுவனின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை அலசினார். ‘கேள்குனுன்டோ’ என்று அதற்கு பெயர் சூட்டியிருந்தார். அடுத்த படத்தில், பழங்குடியின பெண் ஒருவர் காணாமல் போன தனது கணவரை தேடும் பயணத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தும் ‘மூத்தோன்’ என்ற குறும் படத்தை இயக்கியுள்ளார். அது சமூகத்தின் பார்வையை விசாலப்படுத்தியிருப்பதால், கீது மோகன்தாசுக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது. இவரது குறும்படங்களும் விருதுகளை பெற்றுக்கொண்டிருக்கின்றன.
“20 வருடங்களுக்கு முன்பு, ஓரினச்சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்திற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு எனது நண்பர் மைக்கேல் தள்ளப்பட்டார். அவருக்கு அந்த படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். நான் கனடாவில் படிக்கும்போது எனது தோழியாக இருந்தவர் ஸ்டெப்னி. அவரது தம்பிதான் மைக்கேல். அவன் மாநிறம்கொண்டவன். நாங்கள் மூவரும் சேர்ந்து நடக்கும்போது அவனை எனது தம்பியா என்று கேட்பார்கள். அப்படிப்பட்டவன் எங்களிடம் தனது பிரச்சினையை பற்றி எதுவும் பேசாமல் தற்கொலை செய்துகொண்டது எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த படத்தை டெரோன்டா பட விழாவில் வெளியிட்டபோது ஸ்டெப்னி முன் வரிசையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது சில தருணங்களில் நாங்கள் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர்விட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது” என்கிறார்.
கீதுவிடம் ‘ஆணும், ஆணும் காதல்கொள்ளும் கதைகளை நமது ரசிகர்கள் வரவேற்கவேண்டும் என்று கருதுகிறீர்களா?’ என்று கேட்டபோது, “எல்லாவிதமான அன்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நமது சமூகம் மாறிக்கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். எல்லோரும் இப்போது இந்த விஷயத்தில் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். இது அவர் களது மூளையில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையது. இப்படியும் ஒரு அன்பு இருக்கிறது என்பதை எனது சினிமாவில் நான் சொல்லியிருக்கிறேன்” என்கிறார்.
கீது மோகன்தாஸ், ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நளதமயந்தி, பொய்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனதில் எப்போது ஒரு இயக்குனர் உதயமானார்? என்று கேட்டபோது அதற்கு வித்தியாசமான விளக்கத்தை தருகிறார்...
“நான் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் அதில் ஒரு தவறு நடந்து நான் நடிகையாகிவிட்டேன். நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தபோதே கதையும், திரைக்கதையும் எழுதினேன். 2002-ம் ஆண்டு சேஷம் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ராஜீவ்ரவியை சந்தித்தேன். அதுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்ட பின்பு நாங்கள் இருவரும் புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு சென்றோம். அங்கு நிறைய சினிமாக்கள் பார்த்தோம். அதனால் அப்போதே சினிமா மீது என் அன்பு அதிகரித்துவிட்டது.
நான் நிறைய படங்களில் நடித்தேன். ஆனாலும் அந்த துறை எனக்கு முழுமையான திருப்தியை தரவில்லை. பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகை என்ற முறையில் எனக்கு முதலும் கடைசியுமாக மகிழ்ச்சி தந்தது ‘ஒன்று முதல் பூஜ்யம் வரை’ என்ற சினிமாதான்.
நான் ‘கேள்குனுன்டோ’ என்ற குறும்படத்துக்கான கதையை ரெடிசெய்துவிட்டு, அதை படமாக்குவதற்கு முன்னால் யாருடனாவது உதவியாளராக இருந்து தொழிலை கற்றுக்கொள்ளவேண்டுமா என்று ராஜீவிடம் கேட்டேன். அவர் ‘அப்படி எதுவும் தேவையில்லை. நான் என் படத்தை தயாரித்தபடியேதான் சினிமாவை பற்றி கற்றுக்கொண்டேன். அதுபோல் செய்’ என்றார். பின்பு அவர் சினிமாவின் தொழில் நுட்பங்களை கற்றுத்தரும் ஏராளமான புத்தகங்களை வாங்கித்தந்தார். நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, சினிமாக்களை இயக்கினேன்” என்றார்.
‘அன்றைய கீதுவுக்கும் இன்றைய கீதுவுக்கும் நிறைய மாற்றங்கள் இருப்பதாக தெரிகிறதே?’ என்று கேட்டபோது..
“நிறைய மாற்றங்கள் இருப்பது உண்மைதான். நான் சிறு வயதில் கேரளாவில் படித்தேன். பின்பு வெளிநாட்டிற்கு படிக்கசென்றேன். நான் எனக்குள்ளே ஆளுமையை உருவாக்கிக்கொள்ளும் நேரத்தில் வெளிநாட்டிற்கு படிக்க போய்விட்டேன். திரும்பவும் இங்குவந்தேன். நடிக்க வந்த புதிதில் நான் இந்த துறைக்கு பொருத்தமானவள்தானா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அப்போது மற்ற கதாநாயகிகளோடு ஒப்பிடும்போது நான் கடுமையானவளாக கருதப்பட்டதுண்டு. படப்பிடிப்பு தளத்தில் ஆங்கிலத்தில் பேசியதால் நான் அதிகப்பிரசங்கி என்று விமர்சிக்கப்பட்டேன். அப்போது என் தந்தை என்னிடம், ‘உன்னை நீ வித்தியாசப்படுத்திக்காட்டுவதில்தான் உன் வெற்றி அடங்கியிருக்கிறது’ என்றார். பின்பு நான் வாழ்க்கையின் போக்கிலே நிறைய அனுபவ பாடங்கள் கற்றுக்கொண்டேன். நான் இப்போது தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக இருக்கிறேன்” என்றார்.
சினிமாவில் தனக்கு வழிகாட்டியாக இருந்த ராஜீவை, கீது காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
“ராஜீவை நோக்கி என்னை எது ஈர்த்தது என்று கேட்டால், அந்த அபூர்வமான நிமிடம் எது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. வெகுகாலம் நாங்கள் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். யாரையும் வசீகரிக்கும் அளவுக்கு அழகும் திறமையும் கொண்டவர் அவர். இருவரிடமும் இருக்கும் தனித்துவத்தை ஒவ்வொருவரும் அங்கீகரிக்கிறோம் என்பதே எங்கள் பந்தத்தின் சிறப்பு. ‘நீ இப்படி இருந்தால்தான் நான் உன்னை நேசிப்பேன்’ என்பது போன்ற எதிர்பார்ப்புள்ள பந்தம் எங்களிடம் கிடையாது. நாங்கள் இருவரும் வித்தியாசமான மனிதர்கள். வித்தியாசமான முறையில் சினிமாவை உருவாக்குகிறவர்கள். ஆனாலும் இருவரும் எங்கள் தொடர்புடைய அனைத்து சினிமாக்கள் பற்றியும், இதர விஷயங்கள் பற்றியும் ஆழமாக விவாதிப்போம்” என்கிறார்.
இந்த தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளாள். குடும்பத்தை கவனித்துக்கொண்டே சினிமாவில் வெற்றிக்கொடி கட்டுவது பற்றி குறிப்பிடுகையில்...
“ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான தியாகங்கள் இருக்கும். என் குழந்தை சிறுமியாக இருந்தபோது அவளுடைய விளையாட்டுக்களுக்கும், பிடிவாதங்களுக்கும் இடையே தான் நான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். இன்னொரு தனி இடத்தில் இருந்து சொகுசாக எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. மகள் அருகில் இல்லாதபோது நான் மகிழ்ச்சியாக எழுதுவேன் என்றும் சொல்லமுடியாது.
அம்மா என்னோடுதான் இருக்கிறார். ராஜீவும் அவரது பெற்றோரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். இத்தனை பேரின் உதவிகள் கிடைத்தபோதும் சில நேரங்களில் சக்தியை இழந்ததுபோல் தோன்றும். காரணம், நான் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும்போது எனக்காக பொறுப்புள்ள பல வேலைகள் காத்திருக்கும். இப்போது நான் சினிமா வேலைகளை செய்யும் இடத்திற்கு என் மகளையும் அழைத்துச்செல்கிறேன். ராஜீவ் வேலைபார்க்கும் இடத்திற்கும் அவளை கூட்டிச்செல்வேன். அதனால் நாங்கள் என்ன வேலைபார்க்கிறோம் என்பதை அவள் புரிந்து அதற்கு தக்கபடி நடந்துகொள் கிறாள்” என்கிறார்.