ஜான் வெயின்
ஹாலிவுட் பட உலகில் இருபதாம் நூற்றாண்டின் பிரபல நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் ஜான் வெயின். இன்றும் ஹாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இவர் பேசப்படும் இடத்தில் இருக்கிறார்.
சுமார் இருபது படங்களுக்கும் மேலாக சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டிய பிறகுதான், ஜான் வெயினுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் கூட அவருக்கு பெரிய வேடங்கள் கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது. அதுவரையிலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்துத் தள்ளினார்.
1901-ம் வருடம் மே மாதம் 26-ந் தேதி, லோவாவில் உள்ள வின்டர்செட் என்ற இடத்தில் பிறந்தார், ஜான் வெயின். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபல நடிகராக விளங்கிய ஜான் வெயின், பிறக்கும் போதே பிரபலமானவர். ஏனெனில் இவர் பிறந்தபோது 13 பவுண்ட் (கிட்டதட்ட 6 கிலோ) எடை இருந்தார். இவரது தந்தை பெயர் கிளைட், தாயார் பெயர் மேரி. இந்த தம்பதியருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவர்தான் வெயின்.
இவருக்கு 6 வயதாக இருந்தபோது, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியாவில் இருந்த வங்காஸ்டர் நகருக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிளைட் பண்ணையில் வேலை செய்து வந்தார். அதில் சரிவர வெற்றி பெற முடியாததால், அந்த நகரை விட்டு வெளியேறி கலிபோர்னியாவில் இருந்த இன்னொரு நகருக்கு குடியேறினார். அந்த ஊரின் பெயர் கிளின்டேல். அவர்கள் அங்கு வசித்த சமயம், வெயின் ‘பிரபு’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார். அவர் வளர்த்து வந்த நாயின் பெயர் அது. எப்போதும் தன் நாயுடனேயே சுற்றித் திரிந்ததால், அவருக்கு இந்தப் பெயர். நாய்க்கு ‘சின்ன பிரபு’ என்றும், வெயினுக்கு ‘பெரிய பிரபு’ என்றும் பெயரிட்டு அந்தப் பகுதியினர் அழைத்தனர்.
பள்ளியில் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி மிகவும் சிறந்தவராகவே இருந்தார். அப்போது பள்ளியில் நடைபெற்ற நாடகங்களில் இவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்ததால், நடிப்பிலும் சிறந்து விளங்கினார்.
தென் கலிபோர்னியாவில் இருந்த சர்வ கலாசாலையில் 1925-ம் வருடம் மேல்படிப்புக்காகச் சேர்ந்த வெயின், அங்கும் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்கினார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவரால் கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் அவருக்கு கிடைத்து வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது.
இதனால் கல்லூரியை விட்டு வெளியேறிய வெயின் மனதில், உடனடியாக நினைவுக்கு வந்தது பட உலகம்தான். அவரது முயற்சியின் பேரில் ‘பிராவ்ன் ஆப் ஹார்வர்டு’ என்ற படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் இதுதான். 1927-ம் ஆண்டு முதல் சுமார் 20 படங்களாக சிறுசிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்த வெயினுக்கு, 1930-ம் ஆண்டு ரவுல் வால்ட்ஸ் என்ற இயக்குனரின் ‘தி பிக் ட்ரைல்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ரவுல் வால்ட்ஸ்தான், சினிமாவுக்காக வெயின் பெயரை ‘ஜான் வெயின்’ என்று மாற்றியவர். இது ஒரு கவ்பாய் படம். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. வசூலும் செய்ய வில்லை. இதனால் ஜான் வெயின் எதிர்காலத்திற்கான ஒளி முதல் படத்திலேயே மங்கிப்போனது.
அதற்காக ஜான் வெயின் மனம் தளர்ந்து விடவில்லை. தான் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ளவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களை எல்லாம் செய்தார். படத்தில் ஒரு ஓரமாக நின்றுவிட்டு போகும் கதாபாத்திரம் என்றாலும், அதை ஒதுக்காமல் ஒப்புக்கொண்டார். இந்த காலகட்டத்தில் அவர் பல வெஸ்டர்ன் படங்களில் நடித்தார். அந்த படங்களுக்கே உரித்தான சண்டைக் காட்சிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். இருப்பினும் வெஸ்டர்ன் படம் என்றால் ஜான் வெயின் என்று முத்திரை குத்தப்பட்டது.
1939-ம் வருடம், ஜான் வெயின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பிரபல இயக்குனர் ஜான் போர்டு இயக்கத்தில் அந்த வருடம் ‘ஸ்டேஜ் கோச்’ என்ற படத்தில் நடித்தார். சட்டத்தை மீறிய குற்றவாளியாக, ஒரு பயங்கர கும்பலுடன் பெரும் பயணம் மேற்கொள்ளும் கதை. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாகவும் ஜான் போர்டு இயக்கிய ‘தி லாங் வொயஜ் ஹோம்’ என்ற படத்தில் நடித்தார். கடல் பயணம் பற்றிய இந்தத் திரைப்படம் 1940-ம் ஆண்டு வெளிவந்தது. முழுவதும் வெடிமருந்துகளால் நிரப்பப்பட்டு பயணப்பட்ட அந்தக் கப்பலில் பயணம் செய்பவர்களின் திக் திக் நிமிடங்கள்தான் கதையின் சுவாரசியம். இது ஒரு நாவலின் தழுவலில் எடுக்கப்பட்டது. முதலில் நாடகமாக எடுக்கப்பட்டு, பின்னர்தான் திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலமாக முழுமையான கதாநாயகனாக ஜான் வெயின் மாறியிருந்தார்.
இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜெர்மன் நடிகையும், அந்த காலத்தில் ‘செக்ஸ் சிம்பல்’ என்றும் அழைக்கப்பட்ட மெரிலின் டைட்ரிச்சுடன் ‘செவன்சின்னர்ஸ்’ என்ற படத்தில் நடித்தார். இதில் ஜான் வெயினுக்கு கப்பல் அதிகாரி வேடம். அவரை மயக்கி தன் காரியத்தை சாதிக்கும் பெண்ணாக மெரிலின் டைட்ரிச் நடித்தார். இதில் உண்மையிலேயே அந்த நடிகையின் வலையில் ஜான் வெயின் வீழ்ந்து போனார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அதனால் நடிகையுடனானது வெறும் கவர்ச்சி நட்புதான் என்றாகிப்போனது. அது சில காலமே நீடித்தது. பிறகு இருவரும் நிரந்தர நண்பர்களாக இருந்து, மேலும் இரண்டு படங்களில் நடித்தனர்.
ஜான் வெயின் நடிப்பதோடு நில்லாமல், வெளியே தெரியாத தயாரிப்பாளராகவும் இருந்தார். 1947-ல் இவர் தயாரித்த முதல் படம் ‘ஏஞ்சல் அன்ட் தி பேட்மேன்.’ இதைத் தொடர்ந்து பல கம்பெனிகளில் படம் தயாரித்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவரது பெயரில் தயாரிக்கப்பட்ட எந்தப்படமும் வெற்றியைப் பெறவில்லை என்பதுதான்.
1948-ம் ஆண்டு ஹோவர்டு ஹாக்ஸ் இயக்கத்தில் ‘ரெட் ரிவர்’ என்ற படத்தில் நடித்தார். இது ஜான் வெயின் மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது. அடுத்ததாக ஜான் போர்டு இயக்கத்தில் ‘போர்ட் அபாசே’ என்ற படத்தில் ஹென்றி போன்டா மற்றும் சிர்லே டெம்பிள் ஆகிய நடிகைகளுடன் நடித்தார். இந்தப் படத்திலும் ஜான் வெயினுக்கு நல்ல பெயர் கிடைத்தது. வெஸ்டர்ன் படங்களில் தரம் வாய்ந்த படங்கள் என்று பெயர் பெற்ற ‘சி வோர் ய எல்லோ ரிப்பன்’, மற்றும் ‘ரியோ கிராண்ட்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களை ஜான் போர்டு இயக்கியிருந்தார்.
பின்னாட்களில் ஜான் வெயின் அரசியலில் ஈடுபடும் சூழலும் வந்தது. கம்யூனிஸ்டு என்பது இவருக்கு பிடிக்காத வார்த்தை. இதனால் தன்னுடைய ‘பிக் ஜிம் மெக்கைன்’ என்ற படத்தில், அமெரிக்காவில் பல அலுவலகங்களில் ஊடுருவிய கம்யூனிஸ்டுகளை தேடி கண்டுபிடித்து அழிக்கும் அதிகாரியாக நடித்தார்.
1960-ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தபடி இயக்குவது என்ற தன் நெடுநாள் ஆசையை ‘தி அல்மோ’ என்ற படத்தின் வாயிலாக தீர்த்துக் கொண்டார். அந்தப் படத்திற்கு இரண்டு விதமாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் நடிப்பை மட்டும் தொடர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு இதயத்தில் புற்றுநோய் தாக்கியது. இருந்தாலும் நடிப்பை நிறுத்தவில்லை. வைத்தியம் செய்து கொண்டே நடித்தார். நோயை அகற்ற இதயத்தில் சில அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற மருத்துவர்களின் வற்புறுத்தலுக்கு ஒப்புக்கொண்டார். அதனால் சில விலா எலும்புகள் அவருக்கு பறிபோயின.
1968-ல் அரசியலும், தொழிலும் கலந்த ஒரு யுத்த படத்தில் நடித்தார். வியட்நாம் யுத்தம் சம்பந்தப்பட்டது. ‘தி கிரீன் பிரீட்ஸ்’ என்ற அந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கினார். இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனம் ஒன்றுகூட கிடைக்கவில்லை. ஆனால் படம் நன்றாகவே ஓடியது.
ஜான் வெயின் தன்னுடைய கடைசி படத்தில், துப்பாக்கி வீரனாக நடித்து, புற்றுநோயால் உயிரிழப்பது போல நடித்திருந்தார். உண்மையில் அப்போது அவருக்கு வயிற்றில் புற்றுநோய் தாக்கியிருந்ததால் உயிரிழந்தார்.
இவருக்கு மூன்று மனைவிகள். இரண்டு மனைவிகள் மூலம் ஏழு பிள்ளைகள். அவர்களில் சிலர் தந்தையின் தடம் பற்றி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மாறினர். ஜான் வெயின் இறப்பதற்கு முன், அமெரிக்க காங்கிரஸ் இவரது நாட்டு சேவைக்காக தங்கப்பதக்கம் அளித்தது. இந்தப் பதக்கம் இவரது குடும்பத்தாரிடம் 1980-ம் வருடம் தரப்பட்டது. இவரது நினைவாக ஆராஞ்கவுன்டி விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. 1990-ம் வருடம் இவரது படம் கொண்ட தபால்தலைகள் வெளியிடப் பட்டது.
கேன்சர் ஒழிப்பு இயக்கம் ஒன்று, ஜான் வெயின் பிள்ளைகளால் ஆரம்பிக்கப்பட்டது. புற்றுநோய் சம்பந்தப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் இந்த இயக்கம் உதவி செய்து வருகிறது. ஒரு பிரபலமான நடிகர் இறந்த பிறகும் வாழ்வது இதுபோன்ற மக்களுக்காக உழைக்கும் ஸ்தாபனங்களால்தான்.
-நாயகர்கள் வருவார்கள்.