‘‘ரூ.80 கோடி சொத்துக்களை மீட்டு கோவிலுக்கு எழுதி வைத்தேன்’’ –பழம்பெரும் நடிகை காஞ்சனா
ரூ.80 கோடி சொத்துக்களை மீட்டு கோவிலுக்கு எழுதி வைத்தேன் என்று பழம்பெரும் நடிகை காஞ்சனா கூறினார்.
பழம்பெரும் நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70–களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். இப்போது அவருக்கு 79 வயது ஆகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்து இருந்தார். தனது சினிமா வாழ்க்கை குறித்த மலரும் நினைவுகளை காஞ்சனா பகிர்ந்தார். அவர் கூறியதாவது:–
‘‘நான் விமான பணிப்பெண்ணாக இருந்தேன். அப்போது இயக்குனர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து அவரது காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகியாக்கினார். எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றினார். 1964–ல் அந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் படங்கள் குவிந்தன. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். எனக்கு வாணிஸ்ரீ நெருங்கிய தோழியாக இருந்தார்.
நான் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கிப் போட்டு இருந்தேன். அந்த சொத்துக்களை எனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோர்களுடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டேன்.
ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் எனக்கு கிடைத்தன. உடனே ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். எனக்கு திருமணம் செய்துவைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டேன்.
இப்போது எனது தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது தங்கை நன்றாக கவனித்துக்கொள்கிறார். இப்போது ஆன்மிக ஈடுபாடுகளில் தீவிரமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வதும், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதுமாக எனது பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் கேட்டு இருக்கிறேன்.’’
இவ்வாறு காஞ்சனா கூறினார்.