மாற்றுத்திறனாளிகள் மீது கவிஞர் வைரமுத்துவின் ‘பேரன்பு’
டைரக்டர் ராம் இயக்கத்தில், மம்முட்டி-அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’.
பேரன்பு படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல்களில் ஒன்று சமூக ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மனத் துயரத்துக்கு ஆளான மாற்றுத்திறனாளியான சிறுமியை ஒரு மலைப்பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறார், மம்முட்டி.
அந்த சூழ்நிலைக்கும், மாற்றுத் திறனாளியின் மனநிலைக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இலக்கியமாக வந்து விழுந்திருக்கின்றன. தேசிய விருதுக்கான அத்தனை அம்சமும் கொண்ட படமாகவும், பாடலாகவும் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். அந்த பாடல் வரிகள்:-
தூரமாய் சிறுஒளி தோணுதே
சிறுகுயில் கூவுதே சிற்றுயிரே
சூழ்நிலை மனநிலை மாற்றுதே
உடல்நிலை தேற்றுதே குற்றுயிரே
திசைகளை நீ மறந்துவிடு
பயணங்களை... ஓ... தொடர்ந்து விடு
சாலை காட்டில் தொலையலாம்
காலை ஊன்றி எட்டுவை
சாலை வந்து சேருவாய் வா...
கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளைப் பூக்கள் வாடாது
வெயிற்சூடு நேராது
இங்கே தோன்றும் சிறிய மலை
இயற்கைத் தாயின் இனிய கலை
பருகும் நீரில் பாலின் சுவை
பரிவோடு உறவாடு
குழலோடு போன சிறுகாற்று
இசையாக மாறி வெளியேறும்
உன்மீது மட்டும் மழை கொட்டி
மேகம் கலைந்தோடுமே
பெருந்துன்பம் பழகிப் போனாலே
சிறுதுன்பம் ஏதும் நேராது
தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது
குளிர்காலமே!