நடிகை அமலாபாலை தொடர்ந்து நடிகர் பஹத் பாசில் மீது ரூ.14 லட்சம் வரி மோசடி புகார்

அமலாபாலை தொடர்ந்து நடிகர் பஹத் பாசிலும் சொகுசு காரை புதுச்சேரியில் போலி முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.

Update: 2017-10-31 04:36 GMT
சென்னை, 

நடிகை அமலாபால் ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு வாங்கிய தனது பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு காரை போலி முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த காரை சென்னையில் வாங்கி புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார்.

அங்கு பட விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் இந்த காரில்தான் சென்று வருகிறார். கேரளாவில் காரின் மொத்த விலையில் 20 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும் என்று வாகன சட்ட விதி உள்ளது. இதனால் புதுவை முகவரியில் பதிவு செய்ததாகவும் இதன் மூலம் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பஹத் பாசில்

அமலாபால் காரை பதிவு செய்ய கொடுத்துள்ள புதுவை முகவரி போலியானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடப்பதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலாபாலுக்கு 7 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் தனது காரை போலி முகவரியில் பதிவு செய்து வரிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக மலையாள பத்திரிகை புலனாய்வு செய்து தகவல் வெளியிட்டு உள்ளது.

பஹத் பாசில் மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரூ.14 லட்சம்

இவருக்கும் தமிழ், மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நஸ்ரியாவுக்கும் 2014-ல் காதல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பஹத் பாசில் பென்ஸ் இ ரக சொகுசு காரை வாங்கி புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார். இதற்காக புதுச்சேரி லாஸ்பேட், புதுபேட், இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் முகவரியை கொடுத்து உள்ளார்.

ஆனால் அது போலி முகவரி என்று கூறப்படுகிறது. கேரளாவில் இந்த காரை பதிவு செய்தால் ரூ.14 லட்சம் வரி செலுத்த வேண்டும். ஆனால் ரூ.1.5 லட்சத்துக்கு புதுச்சேரியில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடி புகார் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்