அனுஷ்கா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் 3 கதாநாயகிகள்
படமாகும் சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் அனுஷ்கா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
சென்னை,
தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முதன் முதல் பங்களா வீட்டுக்குள் நீச்சல் குளம் அமைத்த நடிகை என்ற பெருமையுடன் செல்வ செழிப்பில் வாழ்ந்த சாவித்திரி சொந்தமாக படம் தயாரித்து கடைசி காலத்தில் பணத்தை எல்லாம் இழந்து வறுமையில் வாடினார்.
இந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘மகாநதி’ படம் உருவாகிறது. டைரக்டர் நாக் அஸ்வின் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படத்தை இயக்குகிறார். இதில் நடிப்பதற்கான நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் சாவித்திரி அளவுக்கு உயரமும், முக தோற்றமும் கொண்டு இருப்பதால் தேர்வாகி இருக்கிறார்.
சமந்தா
சாவித்திரி வாழ்க்கை பற்றி ஆராயும் பத்திரிகை நிருபர் கதாபாத்திரத்தில் சமந்தா வருகிறார். தற்போது அனுஷ்காவையும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து உள்ளனர். பழம்பெரும் நடிகை ஜமுனா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாவித்திரியும், ஜமுனாவும் சம காலத்து நடிகைகள். சாவித்திரி தென்னிந்திய மொழி படங்களில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்தபோது, ஜமுனாவும் அதிக படங்களில் நடித்து இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவித்திரியுடன் நடித்த சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜையும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அவர் எந்த நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற விவரம் வெளியாகவில்லை.
சில்க் சுமிதா
நடிகர்கள் தேர்வு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை கதையும் படமாகி வருகிறது.