‘தூக்கத்தில் கும்பகர்ணன்.. குளிக்கவும் அக்கறைகாட்டமாட்டார்..’ - அமீர்கான் பற்றி மனைவி சொல்லும் ருசிகர தகவல்கள்

பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் மறுபக்கம் குறித்து அவரது மனைவியும் இயக்குநருமான கிரண் ராவ் மனம் திறக்கிறார்...

Update: 2017-04-09 05:34 GMT
பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் மறுபக்கம் குறித்து அவரது மனைவியும் இயக்குநருமான கிரண் ராவ் மனம் திறக்கிறார்...

“நடிகர் என்ற முறையில் அமீர் பன்முகத்திறன் வாய்ந்தவர், திரைப்படத் தொழிலை மிகவும் மதிப்பவர். எனது படமான ‘தோபி காட்’டில் அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திஇருக்கிறார். ஆனால் அவர் படங்களை உருவாக்கும் விதம் தனித்தன்மையானது. அவரது படங்கள் மக்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும். அவரைப் பொறுத்தவரை படங்கள் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமான பயணத்துக்கோ, இன்னொரு உலகத்துக்கோ கொண்டுசெல்ல வேண்டும் என்று விரும்புவார்.

சில கதைகளைக் கேட்கும்போதே அவர் கண்ணீர் விட்டு அழுததுண்டு. ஆனால் கடைசியில் தன்னால் அப்படத்தில் நடிக்க முடியாது என்று நாகரிகமாக மறுத்துவிடுவார். காரணம், குறிப்பிட்ட கதையின் சில அம்சங்கள் தனக்குப் பொருந்தாது என்று அவர் நினைப்பதுதான். கொஞ்சம் சிக்கலானதாக, பல்வேறு அடுக்குகள் கொண்டதாக, செறிவானதாக உள்ள கதைகளையே அவர் தேர்வு செய்வார். அமீரின் தேர்வின் அடிப்படையில் அவரது பாணி படங்கள் அமைகின்றன.

அமீர் நன்கு ஆழ்ந்து உறங்கக்கூடியவர். அந்த விஷயத்தில் இவர் ஒரு கும்பகர்ணன் என்றே சொல்லலாம். ஆனால் வயதாக வயதாக அவர் ஆழ்ந்து உறங்குவது குறைந் திருக்கிறது, முன்பு போல அவர் நீண்டநேரமும் தூங்குவதில்லை. ஆனால் இப்போதும் இவரை தூக்கத்தில் இருந்து எழுப்புவது கடினம்தான்.

அமீரை அவரது உதவியாளர் அமோஸ் தூக்கத்தில் இருந்து எழுப்புவதே வேடிக்கையாக இருக்கும். அவரை திரும்பத் திரும்ப எழுப்ப முயன்று தோல்வியுறும்போது அமோஸ் தான் கையோடு எடுத்து வந்திருக்கும் வாட்டர் ஸ்பிரேயரால் அமீரின் முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார். பின் டவலால் முகத்தைத் துடைப்பார். இந்தச் சடங்கு பலமுறை நடந்தபிறகுதான் அமீர் உறக்கம் கலைந்து எழுவார். 5 முதல் 10 நிமிடங்கள் நீடிக்கும் இந்தத் ‘தண்ணீர்ச் சண்டை’யைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும்.

பொதுவாக, குளிக்காமல் என்னால் ஒரு நாளைத் தொடங்க முடியாது. ஆனால் அமீரைப் பொறுத்தவரை வேலைக்காக குளிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார். விழித்து வெகு நேரம் கழித்தே குளியலறைக்குப் போவார். அவருக்கு குளியல் என்பது முக்கியமான விஷயம் கிடையாது. அவர் தினமும் குளிப்பார் என்றாலும், அதையும் ஒரு வேலையாகத்தான் கருதுவார்.

தனது அம்மா சமைக்கும் உணவு அவருக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவின் கைமணத்தில், ‘பக்கோரி’யுடன் செய்யும் கறி, சிக்கன் குருமா, ஷம்மி கெபாப் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார். அதேபோல அமீருக்குப் பிடித்தமான சீக் கெபாப், அவரது பிறந்தநாளின்போதும், ஈத் பண்டிகை போன்றவற்றின்போதும் கண்டிப்பாக இடம்பெறும். அமீர் தான் நடிக்கும் படத்தின் கடைசி நாளில் இந்த உணவுகளை ஒருபிடி பிடித்துவிடுவார்.

அவரிடம் அழகான கறுப்பு மெர்சிடிஸ் கார் இருக்கிறது. ஆனால் அவர் இன்னோவாவில் கூட ஏறிக்கொண்டு சந்தோஷமாக சுற்றி வருவார். இதுதான் பிடித்த கார், இதுதான் பிடித்த பயணம் என்பதெல்லாம் அவருக்குக் கிடையாது. அவருக்கு தனது குழந்தைகள் மீது பாசம் அதிகம். அவர் ரொம்ப ரொம்ப அன்பான அப்பா. மகன் ஆசாத் வளர்ந்து தற்போது பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டதால், அவனுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். அவர்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது. அவர் அவனைச் சீண்டுவார். கிச்சுக் கிச்சு மூட்டுவார். அவன் படித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தைப் புரட்டி மாற்றிவைத்துவிட்டு போய்விடுவார்.

ஆசாத் விளையாட்டில் ஆர்வமுள்ளவன். அவனுடன் இணைந்து விளையாட அமீரும் விரும்புவார். ஆரம்பத்தில் ஆசாத்துக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்க வைத்த அவர், தற்போது அவனுக்கு செஸ் பயிற்சி அளிக்கச் செய்கிறார்.

சுற்றுலாத்தலமான பஞ்ச்கனியில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. நாங்கள் அங்கே செல்லும்போதெல்லாம் அமீரும், ஆசாத்தும் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். கண்ணும் கையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய விளையாட்டுகளில் ஆசாத் நன்றாகச் செயல்படுவான்.

அமீரும், ஆசாத்தும் தீவிரமான போட்டி உணர்வு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்ப்பதே நன்றாக இருக்கும்.

அமீரின் சகோதரி நிகத் ஒரு மனோதத்துவவியல் நிபுணர். புனேயில் வசிக்கிறார். இவருக்கு பைசல் என்ற தம்பி இருக்கிறார். கிராபிக் டிசைன் படிக்கும் தங்கை பர்ஹத் மும்பையில்தான் இருக்கிறார். நானும் அமீரும் இணைந்து தொடங்கிய ‘பானி பவுண்டேஷன்’ என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்துக்கான லோகோவைக் கூட பர்ஹத்துதான் வடிவமைத்தார்.

அமீர் மிகவும் நுண்ணுணர்வு மிக்க, முதிர்ச்சியுற்ற நபர். அவரின் பொறுமை, ஒரு துறவிக்கு இணையானது. அவர், மக்களின் வலிகளை உணர்வார், தனது பொறுப்புகளில் கவனமாக இருப்பார். வெற்றிகளுடன் அவரால் இயல்பாக இருக்க முடிகிறது, ஆனால் அவர் தனித்தீவில் வசிப்பவர் அல்ல. நானும் ஒரு கவர்ச்சி உலகில் வாழ்பவள் அல்ல. நான் ஒரு சாதாரண, நடுத்தர வாழ்க்கையைத்தான் வாழ்கிறேன். திரைப்பட உலகின் எந்தப் பரபரப்பும் படாபடோபமும் என்னைப் பாதிப்பதில்லை. அதுதான் என்னையும் அமீரையும் இணைத்தது என்று எண்ணுகிறேன். நாங்கள் சேர்ந்து பார்ப்பது வெகு சில படங்கள்தான். ஆனால் அவரவர் என்ன வேலை பார்க்கிறோம் என்று அவ்வப்போது பேசிக்கொள்வோம்.

அமீருக்கு என்று ஒரு பெரிய ஆடை அலமாரி இருக்கிறது. ஆனால், சின்னச் சின்னப் பொத்தல்கள் விழுந்த, பத்தாண்டுகளுக்கு முந்தைய டீ சர்ட்களை அணிவதே அவருக்குப் பிடிக்கும். பழைய, மென்மையான ஆடைகளை அணிய அவருக்குப் பிடிக்கும் என்பதால், அவரை அம்மாதிரியான ஆடைகளிலும், டிராக் பேண்ட்களிலும் வீட்டில் சாதாரணமாகப் பார்க்கலாம்.

அமீரின் உடம்பு அளவு மாற்றத்துக்கு ஏற்ப அவரது ஆடை அலமாரியிலும் ஆடை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னும் தனது பழைய, பெரிய அளவு ஜீன்ஸ்களை பத்திரமாக வைத் திருக்கிறார்.

நாங்கள் அவருக்கு ஆடை வாங்கப் போகும்போதெல்லாம் பல்வேறு விதமான அளவுகளில் உள்ள ஆடைகளை அணிந்து பார்ப்பார். நானும் பல ஆடைகளை அணிந்து ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைப்பார்.

ஆடைகளில் அவருக்கு அபிமான நிறம் என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் வெண்ணிற ஆடைகளை அவர் அதிகம் அணிவார்”

-இப்படித் தனது கணவர் பற்றிச் சொல்லி முடிக் கிறார், கிரண் ராவ்.

மேலும் செய்திகள்