நடைபாதை வசதியுடன் புதிய பூங்கா
தஞ்சை நியூ காவேரி நகரில் ரூ.31½ லட்சத்தில் நடைபாதை வசதியுடன் புதிய பூங்கா அமைப்பதற்காக மேயர் சண்.ராமநாதன் அடிக்கல் நாட்டினார்.
தஞ்சை நியூ காவேரி நகரில் ரூ.31½ லட்சத்தில் நடைபாதை வசதியுடன் புதிய பூங்கா அமைப்பதற்காக மேயர் சண்.ராமநாதன் அடிக்கல் நாட்டினார்.
புதிய பூங்கா
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் நியூ காவேரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 16,410 சதுரஅடி பரப்பளவில் இடம் உள்ளது. இந்த இடம் பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த இடத்தில் வேறொரு நபர் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.உடனே அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கட்டுமான பணியை நிறுத்தியதுடன் அந்த இடத்தில் புதிதாக பூங்கா கட்டுவதற்கு முடிவு செய்தனர். இதற்காக ரூ.31½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு புதிய பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
மரக்கன்றுகள்
பின்னர் அவர் கூறும்போது, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதையுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. மின்விளக்கு வசதிகள், இருக்கை வசதிகள் மட்டுமின்றி பயன்தரக்கூடிய மரக்கன்றுகளும் நட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மண்டல தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் தமிழரசி, சுகாதார ஆய்வாளர் மோகன பிரியதர்ஷினி, பணி ஆய்வாளர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்