கூடலூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

கூடலூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.;

Update:2017-03-17 04:00 IST

கூடலூர்,

நடை பாதைகளில் கடைகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கேரள– கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணையும் பகுதியில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதேபோல் உள்ளூர் வாகனங்களும் இயக்கப்படுகிறது. இதனால் கூடலூர் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. இந்த நிலையில் கூடலூர் நகர நடைபாதைகளில் புற்றீசல் போல் தினமும் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ– மாணவிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். நடைபாதைகளின் கடைகள் பெருக்கத்தால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை தொடருகிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

கடைகள் அகற்றம்– வாக்குவாதம்

இதையொட்டி மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவின் பேரில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் பார்வதி, வருவாய் ஆய்வாளர் காதர்பாஷா, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கூடலூர் நகர பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். பின்னர் நகராட்சி ஊழியர்களை வரவழைத்து நடைபாதைகளில் உள்ள கடைகளை அகற்றும் படி உத்தரவிட்டனர். மேலும் போலீசாரும் பாதுகாப்புக்கு வந்தனர்.

இதையொட்டி கூடலூர் ராஜகோபாலபுரம் தொடங்கி பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கோழிக்கோடு சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதை கடைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் காய்கறி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்து நகராட்சி லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது நடைபாதை வியாபாரிகள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக

நடைபாதை கடைகள் அகற்றும் பணியில் வருவாய் ஆய்வாளர்கள் சரவணக்குமார் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் மோசஸ், வேளாண் விற்பனை உதவி அலுவலர் லட்சுமணன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, நடைபாதைகளில் கடைகள் வைக்கக்கூடாது என பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் வைக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கடைகள் வைத்தால் உடனடியாக அகற்றப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்