புகையிலை பொருட்கள் விற்றதாக கைதான வியாபாரிகள் சங்க தலைவர் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள மளிகை கடைகள்;

Update:2017-03-17 04:15 IST

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளில் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை 10 மணி அளவில் மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ரங்கசாமி, செயலாளர் சஜூ, உறுப்பினர்கள் கங்காதரன், சிவக்குமார், பிரேம் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் ரங்கசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே ரங்கசாமி இதய நோயாளி என்பதாலும், போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விடுவிக்க காலதாமதப்படுத்தியதால் அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்தது.

இது பற்றி அறிந்ததும் மஞ்சூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் நேற்று மாலை 4 மணிக்கு கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு விசாரணைக்கு அழைத்து சென்ற 5 வியாபாரிகளும் தலா ரூ.100 அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்