பெண் அதிகாரியை கேலி செய்ததாக புகார்: பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பெண் அதிகாரியை கேலி செய்த புகார் தொடர்பாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2017-03-17 04:00 IST

மதுரை,

பெண் அதிகாரி புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் பல்வேறு கிளைகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அலுவலகத் தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.

சமீபத்தில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட வாடிக்கையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்த வீடியோ பதிவை விஜயலட்சுமி என்ற அதிகாரி, அலுவலக வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மற்ற அதிகாரிகள் பதிலுக்கு, தொடர்ச்சியாக கேலிச்சித்திரங்களை(ஸ்மைலி) பதிவு செய்தனர்.

அந்த கேலிச்சித்திரங்கள் மூலமாக தன்னை கேலி செய்யும் நோக்கில் குழு உறுப்பினர்கள் நடந்துள்ளனர். எனவே அவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட 39 அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

49 அதிகாரிகள் மீது வழக்கு

இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட லிங்கபாஸ்கர் உள்பட 47 பேர், தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது. மேலும் எங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரிய புகாரின் மீது விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள், புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.

இடைக்கால தடை

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர்கள் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்