விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2017-03-03 04:45 IST

விருத்தாசலம்,

மாசிமக திருவிழா

விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர்களான விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கும், பாலாம்பிகை ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை ஆகியோர் உட்பிரகாரத்தில் வலம் வந்து கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். மதியம் 12 மணிக்கு சிவாச்சாரியார்கள் சிவ மந்திரங்களை ஓத, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வெளிபிரகாரத்தில் உள்ள 4 கொடி மரங்களிலும் கொடியேற்றப்பட்டது.

10–ந் தேதி தேரோட்டம்

இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான வருகிற 7–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விபச்சித்து முனிவருக்கு பழமலைநாதர் அருள்பாளிக்கும் ஐதீக திருவிழாவும், வருகிற 10–ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டமும், 11–ந் தேதி மாசிமக உற்சவமும், 12–ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்