காடையாம்பட்டியில் தனியார் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு–போலீசார் குவிப்பு

ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியில் மதுரை என்பவரிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நிலம் வாங்கியதாக தெரிகிறது.;

Update:2017-03-03 04:15 IST

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியில் மதுரை என்பவரிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நிலம் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் மதுரை என்பவரின் மகன் பாலாஜி தனக்குதான் நிலம் சொந்தம் என கூறி அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இதையடுத்து ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து பாலாஜி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து நேற்று அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் சென்றனர். இதுபற்றி அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வசந்த், மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ச்சுனன், தேர்தல் பணிக்குழு செயலாளர் பாவேந்தன், ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி உள்பட கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் பாதுகாப்புக்காக தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், ஓமலூர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அங்கு வந்த காடையாம்பட்டி தாசில்தார் ராஜேஸ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலம் தொடர்பாக பாலாஜி தாக்கல் செய்த மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மதுரையின் மகள்கள் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, மேலும் ஒரு வார காலம் அவகாசம் தரும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்