கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா


கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா
x

Image Courtesy : AFP

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, கெஜ்ரிவால் கைது விவகாரத்தை கவனித்து வருவதாகவும், இதில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன.

இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி டெல்லியில் உள்ள அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இந்திய அரசு சம்மன் அனுப்பிய விவகாரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "தூதரக ரீதியிலான உரையாடல்கள் குறித்து நான் பேசப்போவதில்லை. ஆனால், கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் நாங்கள் வலியுறுத்துவது நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் சரியான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான். இதை யாரும் மறுக்க முடியாது என்று நினைக்கிறோம்.

அதே போல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டதாகவும், இதனால் தங்களது தேர்தல் பிரச்சாரம் சவாலாக மாறியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியதையும் நாங்கள் அறிவோம். இந்த விவகாரங்கள் அனைத்திலும் நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.


Next Story