அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி


அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 28 March 2024 8:49 AM GMT (Updated: 28 March 2024 10:01 AM GMT)

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து 22-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக வாதிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலை 28-ந் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இன்றோடு கெஜ்ரிவாலின் காவல் முடிவடையும் நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையடுத்து டெல்லி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும், சிறையில் இருந்தவாறே அரசை நடத்துவேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியிலிருந்து நீக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்-மந்திரி பதவியிலிருந்து நீக்க கோரிய பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது . மேலும் இந்த விவகாரத்தில் கோர்ட்டு எவ்வாறு தலையிட முடியும்?, பதவியில் இருந்து நீக்குவது குறித்து கவர்னர், ஜனாதிபதி தானே முடிவு செய்ய முடியும்? என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story