லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
|இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 11ம் நாளாக நீடித்து வருகிறது.
ஜெருசலேம்,
Live Updates
- 17 Oct 2023 10:38 PM IST
காசாவுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலுடன் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய ஜெர்மனி
இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் கூறுகையில், “எங்கள் எண்ணங்கள் இஸ்ரேலில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம்.
ஹமாஸ் செய்த கொடூரமான மற்றும் இழிவான தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெர்மன் அதிபர் மரியாதை செலுத்துவார். இஸ்ரேலை தலைமை படுத்துவத்துடன் மட்டுமல்லாமல், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்தவும் உத்திகளை உருவாக்கும் நோக்கத்துடன் ஜெர்மனி உள்ளது” என்று அவர் கூறினார்.
- 17 Oct 2023 8:09 PM IST
காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
- 17 Oct 2023 7:02 PM IST
இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் அஜய் திட்டம் மூலமாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்தியாவுக்கு வரும் விமானத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 18 பேரும் அழைத்து வரப்படுவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- 17 Oct 2023 4:24 PM IST
லெபானானில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “ சற்று நேரத்திற்கு முன்பாக லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வேலியை தாண்ட முற்பட்ட போது வெடி பொருள் வெடித்ததில் 4 பேரும் கொல்லப்பட்டனர்” என்று கூறியுள்ளது.
- 17 Oct 2023 3:35 PM IST
பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருடன் துருக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி இது குறித்து கூறுகையில், ஹமாஸ் இயக்கத்தினரும் துருக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள வெளிநாட்டுக்காரர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை விடுவிக்க வலியுறுத்தி இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிணைக் கைதிகளை பத்திரமாக விடுவிப்பதை உறுதி செய்யுமாறு பல நாடுகள் துருக்கியிடம் வலியுறுத்தியிருக்கிறது” என்றார்.
- 17 Oct 2023 2:52 PM IST
அடுத்த கட்ட போருக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனைவரும் தரைவழி தாக்குதல் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டியதாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.
- 17 Oct 2023 1:52 PM IST
200-250 பிணை கைதிகள் உள்ளனர் - ஹமாஸ்
தங்கள் வசம் 200 முதல் 250 பிணை கைதிகள் உள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பிணை கைதிகளில் 22 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. உயிரிழந்த பிணை கைதிகள் அனைவரும் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
- 17 Oct 2023 1:32 PM IST
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் ராணுவ டாங்கி மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் மெதுலா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. முன்னதாக, லெபனான் எல்லைப்பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்த மக்களை இஸ்ரேல் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 17 Oct 2023 1:24 PM IST
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய பத்திரிகையாளர் சிண்டிகேட் தெரிவித்துள்ளது.
- 17 Oct 2023 1:19 PM IST
காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்பு - ஐ.நா. கவலை
காசாவிற்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்பை இஸ்ரேல் துண்டித்தது. இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக காசாவின் தெற்கு பகுதிக்கான குடிநீர் இணைப்பை இஸ்ரேல் தற்காலிகமாக திறந்து விட்டது.
ஆனாலும், காசாவில் கடுமையான குடுநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், காசாவில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.