தீவிரமடையும் போர்: ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை..!!
|ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்,
Live Updates
- 26 Oct 2023 9:44 PM IST
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. சைரன் ஒலித்ததால், பாதுகாப்பு அறைக்கு மக்கள் தப்பியோடினர். சைரன் சத்தம் கேட்டு உயிர் பயத்தில் சாலைகளின் ஓரத்தில் மக்கள் பதுங்கினர்.
- 26 Oct 2023 8:12 PM IST
ஹமாஸ் பிரதிநிதிகள் குழு மாஸ்கோ பயணம்
ஹமாசின் பிரதிநிதிகள் குழு ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். மாஸ்கோவிற்கு வருகை தந்தவர்களில் ஹமாஸ் மூத்த உறுப்பினர் அபு மர்சூக்கும் இருப்பதாக ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 26 Oct 2023 6:17 PM IST
காசா மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - துருக்கி அதிபர்
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார். காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் "முஸ்லிம்களின் இரத்தம்" என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை என்று அவர் கூறினார்.
- 26 Oct 2023 5:59 PM IST
ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. துல்லியமான வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
- 26 Oct 2023 2:34 PM IST
காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
வடக்கு காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாசின் நிலைகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
- 26 Oct 2023 1:23 PM IST
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரின் இரண்டு இலக்குகள்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இந்த போரின் இரண்டு இலக்குகளில் ஒன்று, ஹமாஸ் அமைப்பின் ராணுவத்தினரை அழிப்பதும் மற்றும் அவர்களுடைய அரசாங்கத்தின் திறன்களை அழிப்பதும் ஆகும்.
இதில் மற்றொன்று, எங்களுடைய பணய கைதிகளை திரும்ப கொண்டு வருவதற்கான ஒவ்வொரு சாத்தியப்பட்ட விசயமும் மேற்கொள்வது ஆகும் என்று அவர் பேசியுள்ளார்.
இந்த தரைவழி தாக்குதல் எப்போது? அல்லது எப்படி? நடைபெறும் என்பது பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. அதன் தொலைவு பற்றியும் விரிவாக நான் கூறமாட்டேன். அதுபற்றி பொதுமக்கள் பெருமளவில் அறிந்திருக்கமாட்டார்கள். அந்த வழியிலேயே அது, நடைபெறும். இதனால், எங்களுடைய ராணுவ வீரர்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.
- 26 Oct 2023 11:10 AM IST
காசாவில் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். அவர் கூறும்போது, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான போரில் ஈடுபட்டு உள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரின் இலக்கானது நாட்டை பாதுகாக்க வேண்டும் என கூறிய நெதன்யாகு, காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான தரைவழியே ஊடுருவி நடத்தும் தாக்குதல் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
- 26 Oct 2023 9:41 AM IST
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூப்பர் யூனியன் பகுதியில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலர் கும்பலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, யூத மாணவர்கள் சிலர் அச்சத்தில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். இதனை தொடர்ந்து அந்த கும்பல், நூலகத்தின் வாசல் கதவை ஓங்கி அடித்து, பாலஸ்தீன விடுதலை கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. எனினும், நியூயார்க் காவல் துறை வெளியிட்ட செய்தியில், நூலகத்தில் இருந்து யூத மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி கொண்டு வந்து விட்டோம் என தெரிவித்து உள்ளது.
- 26 Oct 2023 9:31 AM IST
அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுடன் இணைந்து அமெரிக்க அதிபர் பைடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய பைடன், இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், கூட்டணி நாடான இஸ்ரேலுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்ட கோழைகள் என சாடிய அமெரிக்க அதிபர் பைடன், காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
- 26 Oct 2023 5:04 AM IST
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயம் - ஐ.நா.வில் இந்தியா கருத்து
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 3 வாரங்களாக தொடர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த போரை நிறுத்த ஐ.நா.வும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் ரவீந்திரா பேசியதாவது:-
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பெரிய அளவிலான பொதுமக்கள் உயிர் இழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி மிகவும் ஆபத்தானது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண
மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். அனைத்து தரப்பினரும் பொதுமக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெருகி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலை இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நம்பகமான, நேரடி பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இது இறையாண்மை மற்றும் சுதந்திரத்துடன் சாத்தியமான பாலஸ்தீன அரசை நிறுவ வழிவகுக்கும்.
மனிதாபிமான உதவிகள் தொடரும்
இதை நோக்கி, நேரடியான சமாதான பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.
இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட நெருக்கடியான தருணத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம்.
காசா மக்களுக்கு மனிதாபிமான பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை இந்தியா வரவேற்றது. பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் மனிதாபிமான பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த சவாலான காலங்களில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். இவ்வாறு ரவீந்திரா பேசினார்.