லைவ்: - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
|காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்,
Live Updates
- 14 Oct 2023 9:37 PM IST
காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா முனையில் உள்ள இஸ்ரேல் ராணுவ முகாமிற்கு சென்ற பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, படையினருடன் இருக்கிறேன். படையெடுப்பு தங்களது படை தயாராக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
- 14 Oct 2023 7:30 PM IST
இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வெளியேறி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி போர் விதிகளை இஸ்ரேல் ராணுவம் மீறி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
- 14 Oct 2023 7:03 PM IST
மருத்துவமனையில் உள்ளவர்கள் உடனே வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.
- 14 Oct 2023 4:05 PM IST
காசாவில் தண்ணீரின்றி 20 லட்சம் மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் பாலஸ்தீனிய மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர் என ஐ.நா. சபை கவலை தெரிவித்து உள்ளது.
- 14 Oct 2023 1:28 PM IST
மேற்குகரையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை:
பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஜெனின், நப்லஸ், ஜெரிகொ ஆகிய நகரங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஜெரிகொ பகுதியில் நடந்த சோதனையின் போது பாலஸ்தீனிய இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு இஸ்ரேல் பாதுகாப்புப்படை கொடுத்த பதிலடி தாக்குதலில் பாலஸ்தீன இளைஞர் உயிரிழந்தார். மேற்குகரையில் இஸ்ரேல் நடத்திய சோதனையில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 14 Oct 2023 12:29 PM IST
உங்கள் அன்புக்குரியவர்கள் மீது அக்கறை இருந்தால் வெளியேறுங்கள் - பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் 6 மணி நேரம் கெடு
வடக்கு காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் காசாவின் வடக்கு பகுதியில் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். 11 லட்சம் பேரை இடம்பெற இஸ்ரேல் அறிவுத்தியுள்ள நிலையில் வடக்கு காசாவில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் 6 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ அரபு மொழி செய்தித்தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வடக்கு காசா முனையின் பெட் ஹனுன் நகரில் இருந்து தெற்கு காசா முனையின் கான் யுனிஸ் நகருக்கு பாலஸ்தீனர்கள் பாதுகாப்பாக செல்வதை இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்கிறது. பெட் ஹனுன் நகரில் இருந்து கான் யுனிஸ் நகருக்கு செல்ல மக்கள் அல் பஹர், அல் டின் ஆகிய தெருக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கு காசா முனைக்கு சென்றுவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நேரப்படி தற்போது சரியாக 10 மணி ஆகிறது. இஸ்ரேலின் கெடு இந்திய நேரப்படி இன்று மாலை 6.30க்கு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 14 Oct 2023 11:58 AM IST
இஸ்ரேலிய பச்சிளம் குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் - வீடியோ
இஸ்ரேலிய பச்சிளம் குழந்தைகளை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக வைத்துள்ள வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, இவர்கள் பயங்கரவாதிகள், இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
- 14 Oct 2023 11:07 AM IST
வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை தடுக்க ஹமாஸ் முயற்சி - இஸ்ரேல் குற்றச்சாட்டு
வடக்கு காசாவில் இருந்து மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று கெடு விதித்தது. இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதாக தகவல் வெளியானது. இஸ்ரேலின் எச்சரிக்கையையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை தடுக்க ஹமாஸ் முயற்சிப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. எங்கள் நோக்கங்களை முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம், ஏனென்றால் போரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் எங்கள் எதிரியல்ல. பொதுமக்களை கொல்லவோ, காயப்படுத்தவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நாங்கள் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக சண்டையிடுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- 14 Oct 2023 10:13 AM IST
120க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது - இஸ்ரேல் தகவல்
120க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பு காசாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- 14 Oct 2023 10:00 AM IST
ஹமாசால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் பிணமாக மீட்பு
ஹமாசால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 150க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலரின் உடல் காசா முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய சோதனையில் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.