திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலை
திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த பழமை வாய்ந்த சிலைகளை பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், கடற்கரை மண்ணில் புதைந்து கிடந்த 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலை தற்போது கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் நீடித்து வரும் கடல் அரிப்பால், கிடைக்கப் பெற்றுள்ள முனிவர் சிலை மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளிலும் ருத்ராட்சம் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் முனிவர் சிலை, சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.
அதே போல், அதன் அருகே மற்றொரு நாகர் சிலையும், பெண் உருவம் கொண்ட ஒரு அடி உயரமுள்ள மற்றொரு சிலையும் கிடைத்துள்ளது. இந்த பழமை வாய்ந்த சிலைகளை பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இதுபோல் தொடர்ந்து கடற்கரையில் கிடைக்கும் சிலைகளை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.