சினிமா டைரக்டர் செய்யாறு ரவி மாரடைப்பால் மரணம்
சினிமா டைரக்டர் செய்யாறு ரவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சென்னை,
சினிமா டைரக்டர் செய்யாறு ரவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54.
பிரபு நடித்த ‘தர்மசீலன்,’ கார்த்திக் நடித்த ‘அரிச்சந்திரா’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், செய்யாறு ரவி. ‘கோபுரம்,’ ‘பணம்,’ ‘ஆனந்தம்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களையும் டைரக்டு செய்திருக்கிறார். தற்போது, ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்,’ ‘சுமங்கலி’ ஆகிய 2 தொடர்களை டைரக்டு செய்து வந்தார்.
‘சுமங்கலி’ தொடரின் படப்பிடிப்பு சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த தொடரை செய்யாறு ரவி டைரக்டு செய்து கொண்டிருந்தபோது பகல் 12 மணி அளவில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
அவருடைய உடல் அசோக்நகரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்பிறகு அவருடைய உடல் சொந்த ஊரான செய்யாறுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது. மரணம் அடைந்த செய்யாறு ரவியின் மனைவி பெயர், ஜெயந்தி. இவர்களுக்கு நந்தகுமார் (20) என்ற மகனும், தேன்மொழி (16) என்ற மகளும் இருக்கிறார்கள்.
Next Story