ஈரோடு பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதல்


ஈரோடு பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதல்
x
தினத்தந்தி 23 Feb 2017 3:45 AM IST (Updated: 23 Feb 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதல் பயணிகள் உயிர்தப்பினர்

ஈரோடு,

ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.25 மணிஅளவில் கோவைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் சசிக்குமார் ஓட்டினார். நடத்துனராக சக்திவேல் பணியாற்றினார். அந்த பஸ், சூரம்பட்டி டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு அருகில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது முத்தம்பாளையத்திற்கு செல்லும் மினிபஸ் ஒன்று குறுக்கே வந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், மினி பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதனால் 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் `அய்யோ அம்மா` என அலறினர். ஆனால் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தினால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசாரும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மினிபஸ்சையும், அரசு பஸ்சையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தினால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஈரோடு பஸ் நிலையத்தில் மினி பஸ்கள் நிறுத்துவதற்காக தனிஇடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சூரம்பட்டி, ரெயில்நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியிலும் மினிபஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். இந்த பகுதியில் மினிபஸ்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விதிமுறையை மீறி மினி பஸ்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.’’, என்றார்.


Next Story