இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Jan 2025 2:03 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததும், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாழ்த்து பெற்றார்.
- 11 Jan 2025 1:44 PM IST
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
- 11 Jan 2025 1:10 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; 7 சிறப்பு நீதிமன்றங்கள்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
- 11 Jan 2025 1:03 PM IST
புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
- 11 Jan 2025 11:11 AM IST
பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.