< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 370 ஆக உயர்வு- 6 வது நாளாக தொடரும் மீட்பு பணி

தினத்தந்தி
|
4 Aug 2024 6:41 AM IST

வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 370-ஆக உயர்ந்துள்ளது.

இதில் 148 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மேலும் 34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Live Updates

  • 4 Aug 2024 9:58 PM IST

    நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும் - 3ம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்

    வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்திற்கு கேரளாவை சேர்ந்த 3-ம்வகுப்பு மாணவர் ராயன் கடிதம் எழுதி உள்ளார். அதில், நிலச்சரிவில் சிக்கியுள்ள பல உயிர்களை மீட்டு வருகிறீர்கள். பிஸ்கெட்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு பாலத்தையே கட்டி முடித்துவிட்டீர்கள். இதை பார்த்து நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என மலையாளத்தில் இருந்த கடிதத்தை மொழிபெயர்த்து எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது. 


  • தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - வீணா ஜார்ஜ்
    4 Aug 2024 8:44 PM IST

    தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - வீணா ஜார்ஜ்

    வயநாடு நிலச்சரிவு பேரிடர் தொடர்பாக தவறான செய்தியை பரப்புபவர்களின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும் நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகிறது. குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக வரும் செய்தி தவறானது என அவர் கூறியுள்ளார். 

  • 4 Aug 2024 7:59 PM IST

    வயநாடு நிலச்சரிவு - கோழிக்கோடு மாநகராட்சி ரூ.3 கோடி நிதியுதவி

    வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணிக்காக கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி கோழிக்கோடு மாநகராட்சி வழங்கியது. கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியை மேயர் பீனா பிலிப் முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் வழங்கினார்.

  • 4 Aug 2024 6:55 PM IST

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக முண்டக்கை-சூரல்மலை பகுதியை இணைக்கும் வகையில் பெய்லி பாலம் அமைத்த ராணுவ வீரர்களுக்கு, குழந்தைகளுடன் திரண்டு வந்து ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

  • நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து மீட்பு
    4 Aug 2024 5:12 PM IST

    நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து மீட்பு

    சூரல் மலையில் சிக்கிய அரசு பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு பெய்லி பாலம் வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. 

  • 4 Aug 2024 12:42 PM IST

     வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பாதுகாப்பிற்காக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வயநாட்டில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

  • 4 Aug 2024 11:15 AM IST

    நிலச்சரிவால் முண்டக்கையில் மட்டும் 540 வீடுகள் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • 4 Aug 2024 10:10 AM IST

    கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணுர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 4 Aug 2024 8:03 AM IST

    நிலச்சரிவு நடந்த பகுதிகளில் வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

  • 4 Aug 2024 7:15 AM IST

    மாயமான 200 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 6-வது நாளாக மீட்பு பணி நீடித்து வருகிறது. மண்ணில் ஆழமாக புதைந்தவர்களை கண்டறிய நவீன ரேடார் கருவிகளை கேரள அரசு கோரியது. இதையடுத்து, ராணுவ வடக்கு மண்டலத்தில் இருந்து ஒரு ரேடார் மற்றும் டெல்லியில் இருந்து 4 ரீகோ ரேடார்கள் மற்றும் ஆபரேட்டர்கள் விமானத்தில் வரவழைக்கப்பட உள்ளனர்.

    நிலத்துக்குள் ஆழ்ந்து ஆய்வு செய்யும் திறன் கொண்ட டிரோன் மற்றும் ரேடார்களை ராணுவம் பயன்படுத்த உள்ளது. இனிமேல் உடல்களை மீட்கவும், அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்கவும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்