பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
|பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா,
Live Updates
- 17 Aug 2024 3:31 PM IST
பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் அசோகன் இன்று கூறியுள்ளார்.
- 17 Aug 2024 2:41 PM IST
மேற்கு வங்காளத்தில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை செய்யப்பட்ட வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அகில பாரதீய வித்யார்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 17 Aug 2024 10:55 AM IST
கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 17 Aug 2024 8:27 AM IST
கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில் டாக்டர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 17 Aug 2024 6:59 AM IST
24 மணிநேர வேலை நிறுத்தம்:
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. விருப்பு அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- 17 Aug 2024 6:58 AM IST
பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை:
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். அதேவேளை, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவையடுத்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்.கே. கர் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மருத்துவமனையில் உள்ள உபகரணங்களை அடித்து உடைத்து நொறுக்கினர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.