< Back
உலக செய்திகள்
லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு
உலக செய்திகள்

லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

தினத்தந்தி
|
12 Oct 2023 9:40 AM IST

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் பலி எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது.

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இரு தரப்புக்கு இடையேயான போர் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் சேர்த்து கிட்டத்தட்ட 3,600 பேர் பலியாகியுள்ளனர். போரினால் காசா முனையில் இருந்து மட்டும் சுமார் 3,38,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Live Updates

  • 12 Oct 2023 6:23 PM IST

    காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • 12 Oct 2023 6:22 PM IST

    விமான படைகளுக்கு இஸ்ரேல் அழைப்பு

    பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமானப்படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • 12 Oct 2023 6:18 PM IST

    சிரியாவின் விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

    சிரியாவில் உள்ள 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளது. டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியா குற்றம்சாட்டி உள்ளது. மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

  • போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - இஸ்ரேல்
    12 Oct 2023 5:39 PM IST

    போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - இஸ்ரேல்

    ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்ததற்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பிடம் எந்த தலைவரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது எனவும் ஹமாஸ் அமைப்பு ஐஎஸ் போன்றது. ஐஎஸ் போன்று ஹமாஸ் அமைப்பும் அழிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

  • 12 Oct 2023 5:28 PM IST

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் பலி  எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1,200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

  • 12 Oct 2023 4:30 PM IST

    காசா உடனான எல்லையை திறக்கும் எகிப்து

    காசா உடனான எகிப்தின் ரபா எல்லையை திறப்பதாக எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் இடங்களில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மனிதாபிமான உதவிகளுக்காக எகிப்து, கத்தார் மற்றும் ஐநா அமைப்புடன் ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹமாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • 12 Oct 2023 3:39 PM IST

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவு திரட்டும் ஈரான்

    லெபனான் செல்கிறார் ஈராக் வெளியுறவுத்துறை மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லஹியான். ஐக்கிய அரபு அமீரக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாலஸ்தீன மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    24 மணி நேரத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, சிரியா அதிபர் மற்றும் சவுதி மன்னரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.

  • பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது - இஸ்ரேல்
    12 Oct 2023 2:34 PM IST

    பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது - இஸ்ரேல்

    பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் உள்ளிட்டவை வழங்க மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என சுமார் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

  • 12 Oct 2023 1:29 PM IST

    இஸ்ரேல் விவகாரம்: ஜோபைடன் பேச்சு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்

    இஸ்ரேலில் குழந்தைகளின் தலைகளை ஹமாஸ் அமைப்பினர் துண்டாக்கும் புகைப்படத்தை பார்த்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, “ இது போன்ற எந்த ஒரு படத்தையும் அதிபர் ஜோ பைடன் பார்க்கவில்லை எனவும் ஊடகங்களிலும், இஸ்ரேல் பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறியதை வைத்தும் ஜோ பைடன் அவ்வாறு பேசினார்” என்று தெளிவு படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்