லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
|இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.
ஜெருசலேம்,
Live Updates
- 22 Oct 2023 9:15 PM IST
எல்லையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் தகர்க்கப்பட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் இஸ்ரேல்
காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தின.
காசாவுடனான எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளை ராக்கெட்டுகளை வீசியும், புல்டோசர்கள் கொண்டு தகர்த்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அதேபோல், கடல் வழியாகவும், வான்வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேலில் 1,405 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக போர் அறிவித்த இஸ்ரேல் காசாமுனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசா எல்லையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் தகர்க்கபப்ட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இரும்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு காசா எல்லைப்பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.
- 22 Oct 2023 8:24 PM IST
லெபனான் பேரழிவை சந்திக்கும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 16வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே, இந்த போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. லெபனான் எல்லையில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இஸ்ரேல் - லெபனானின் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், லெபனான் எல்லையில் உள்ள குடிமக்களை இஸ்ரேல் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா?சாவா? போன்றது’ என்றார்.
- 22 Oct 2023 7:19 PM IST
பிணைக்கைதிகள்:-
இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலின் போது பலரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர். பிணைக்கைதிகளில் அமெரிக்காவை சேர்ந்த தாய், மகள் என இருவரை ஹமாஸ் நேற்று முன் தினம் விடுதலை செய்தது. ஆனால், எஞ்சிய பிணைக்கைதிகள் காசாமுனையில் ஹமாஸ் வசம் உள்லனர். பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் வசம் 212 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- 22 Oct 2023 5:05 PM IST
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்து 651 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.
- 22 Oct 2023 11:22 AM IST
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது. ஜோ பைடன் இஸ்ரேலுக்கு நேரில் சென்று தனது ஆதரவை அளித்தார். மேலும், போர் விமானங்கள், போர்க்கப்பல்களை இஸ்ரேலுக்கு ஏற்கனவே அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், ஏவுகணையை சுட்டு வீழ்த்தும் THAAD பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ‘அயன் டோம்’ பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
- 22 Oct 2023 7:51 AM IST
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறுகையில்,
இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. எனவே,இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது” என்று கூறினார்.
- 22 Oct 2023 5:17 AM IST
பிணைக் கைதிகளை விரைவில் அழைத்து வர வேண்டும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் பொதுமக்கள் போராட்டம்
டெல் அவிவ், இஸ்ரேல்:
ஹமாஸ் அமைப்பினர் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகளை விரைவாக அழைத்து வருவதற்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
- 22 Oct 2023 4:36 AM IST
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது குண்டுவீச்சை முடுக்கிவிடுவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
ஜெருசலேம்,
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது குண்டுவீச்சை முடுக்கிவிட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இதனிடையே எகிப்தில் இருந்து முதலுதவி லாரிகள் வந்த சில மணி நேரங்களிலேயே, போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான நிவாரணங்களைக் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 22 Oct 2023 2:06 AM IST
2 அமெரிக்க பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், எல்லையில் உள்ள வேலிகளை உடைத்துகொண்டு இஸ்ரேலின் தெற்கு நகரங்களுக்குள் ஊடுருவினர்.
அங்கு நூற்றுக்கணக்கானோரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் அமைப்பினர் பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக பிடித்து, காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த நிலையில் தங்களது பிடியில் இருந்த அமெரிக்க பெண்கள் இருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் விடுவித்தனர். காசா எல்லையில் விடுவிக்கப்பட்ட இருவரையும் இஸ்ரேல் ராணுவம் மீட்டு பாதுகாப்பாக இஸ்ரேலுக்குள் அழைத்து சென்றது.
விடுமுறையை கொண்டாட இஸ்ரேலுக்கு சென்ற அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ரானன் ஆகிய இருவரும் கடந்த 7-ந்தேதி தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு சென்றபோது ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கினர்.
தாய், மகள் இருவரும் தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்களை பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேல் செய்து வருகிறது.
இதனிடையே விடுவிக்கப்பட்ட அமெரிக்கர்கள் இருவரிடமும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.