முத்தரப்பு ஒருநாள் தொடர்; கோப்பையை அறிமுகம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்


முத்தரப்பு ஒருநாள் தொடர்; கோப்பையை அறிமுகம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
x

Image Courtesy: @TheRealPCB

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது.

கராச்சி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவீல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடருக்காக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிமுகம் செய்துள்ளது. லாகூரில் நடைபெற்ற கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா, நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Next Story