இஸ்ரேலை விசாரிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை.. சர்வதேச கோர்ட்டு மீது தடை விதித்தது அமெரிக்கா


இஸ்ரேலை விசாரிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை.. சர்வதேச கோர்ட்டு மீது தடை விதித்தது அமெரிக்கா
x
தினத்தந்தி 7 Feb 2025 12:51 PM IST (Updated: 7 Feb 2025 5:14 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச கோர்ட்டின் விதிமீறல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கைகள் எடுக்கும் என டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்ததாகவும், இந்த குற்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறைமந்திரி யோவ் கேலண்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி சர்வதேச குற்றவியல் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ப், காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. சர்வதேச கோர்ட்டின் விசாரணையையும் பிடிவாரண்டையும் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா நிராகரிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவையும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலையும் குறிவைத்து சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற நடவடிக்கைகளை சர்வதேச கோர்ட்டு மேற்கொண்டுள்ளது. நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இன்றி கைது வாரண்டுகளை பிறப்பித்ததன் மூலம் சர்வதேச கோர்ட்டு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது விசாரணை நடத்த ஐ.சி.சி.க்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. இரு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச கோர்ட்டின் இந்த விதிமீறல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கைகள் எடுக்கும். அவர்களின் சொத்துக்களை முடக்குவது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை போன்ற நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டிரம்ப் இந்த புதிய உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.

சர்வதேச கோர்டுக்கு தடை விதிப்பது, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை கடினமாக்கும் என்றும், சர்வதேச கோர்ட்டு விசாரிக்கும் பிற பகுதிகளில் அமெரிக்க நலன்களுக்கு பாதகமாக அமையும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கோர்ட்டில் அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுப்பினராக இல்லை. சர்வதேச கோர்ட்டை இரு நாடுகளும் அங்கீகரிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story