மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதிகாரிகள் ஊதியம் வாங்குவதற்காக கடமைக்கு பணியாற்ற கூடாது
மக்களுக்கு அதிகாரிகள் சேவை செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகள் ஊதியம் வாங்குவதற்காக கடமைக்கு பணியாற்ற கூடாது என்று கலெக்டர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
ஆலோசனை கூட்டம்
சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் நாகராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் நாகராஜ் பேசியதாவது:-
2021-22-ம் ஆண்டு நிதி ஆண்டில் மத்திய-மாநில அரசுகள் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பொதுமக்களை உரிய முறையில் சென்றடைய அதிகாரிகள் பணியாற்றவில்லை. இதனால் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
ஊதியம் வாங்க மட்டும்...
இதையடுத்து கடந்த 2022-23-ம் ஆண்டில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி கடந்த 6 மாதங்கள் ஆகியும் பயனாளிகளுக்கு சென்றடையவில்லை. இதற்கு அரசு அதிகாரிகளே முழு பொறுப்பு. மக்களுக்கு சேவை செய்ய தான் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஊதியம் வாங்க மட்டும் அதிகாரிகள் கடமைக்கு பணியாற்ற கூடாது. மக்கள் சேவை செய்ய விருப்பம் இல்லாத அதிகாரிகள் பணி இடமாற்றம் ஆகி வேறு இடத்துக்கு தாரளமாக செல்லலாம். மத்திய-மாநில அரசின் நிதியை பயனாளிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.