கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்
கழிவுநீரை சுத்தப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தும் எந்திரங்கள் உள்ளன. தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்களின் பங்கு மகத்தானது.
ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீரின் அளவு குறைகிறது. ஓர் அடுக்குமாடி குடியிருப்பு உருவாகிறது என்றால் அதன் விளைவாக அந்த குடியிருப்பைச் சுற்றியிருக்கும் இடங்களிலும் நிலத்தடி நீர் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பொருத்துவதன் மூலம் குடிநீர் தவிர்த்துத் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற தேவைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்த முடியும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்துவதின் மூலம் பல நன்மைகள் உள்ளன. தகுந்த திறனுள்ள எந்திரங்களைப் பொருத்துவதன் மூலம் சுழற்சி முறையில் நீரின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
நீர் மேலாண்மையின் மூலம் கட்டுமானங்களுக்கான நீரும் விவசாயத்துக்கான நீரும் பெருமளவு பயன்படுத்துவதற்கான வழி ஏற்படும். ஏனைய தேவைகளுக்குச் சுழற்சி நீர் பயன்படுவதால் குடிநீரைப் பெருமளவு சேமிப்பதற்கு வழி ஏற்படும். கழிவு நீர் சுத்திகரிப்பு எந்திரத்தைப் பயன்படுத்தி பெறப்படும் 70 சதவீதம் நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும்.
கழிவு நீர் சுத்திகரிப்பு எந்திரம் பல்வேறு திறன்களில் கிடைக்கிறது. இந்த எந்திரத்தைத் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் என பல இடங்களிலும் பொருத்தலாம். எந்திரங்களின் திறனைப் பொறுத்து அதற்கு செலவாகும்.