140 கோடி மக்கள் இருந்தால் இதுதான் பிரச்சினை - ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஆதரவு


140 கோடி மக்கள் இருந்தால் இதுதான் பிரச்சினை - ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஆதரவு
x

image courtesy: AFP

தினத்தந்தி 12 Dec 2024 4:03 PM IST (Updated: 12 Dec 2024 5:30 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்கு விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பும்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் களத்திலும் கேப்டனாக அவரது செயல்பாடுகள் சுமாராகவே இருந்தன. இதனால் மீண்டும் பும்ராவை கேப்டனாக்குங்கள் என்று பலரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இப்படி ஒரு தோல்வியை சந்திக்கும் போது பலரும் வல்லுனர்களாக மாறி விமர்சிப்பதாக ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஷமி இருந்திருந்தால் பும்ராவுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தெறிக்க விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதல் போட்டியில் 2 அணிகளுமே குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனார்கள். பின்னர் பிட்ச் மாறியதும் பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடினார்கள். எனவே கிரிக்கெட் என்பது எப்போதும் யாராலும் கணிக்க முடியாத ஒரு விளையாட்டு.

ஆனால் நம்முடைய இந்த இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும். முகமது ஷமியை மட்டுமே நாம் தவற விடுகிறோம். ஒருவேளை அவர் பும்ராவுடன் இருந்திருந்தால் நம்முடைய பவுலிங் அட்டாக் ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.

2-வது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது என்று சொல்வதை விட ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது போல இருந்தது. ஆஸ்திரேலியாவும் இப்படி கம்பேக் கொடுக்கக்கூடிய அணியாகும். அவர்கள் மிகவும் கடினமான எதிரணி. எனவே போராடினால்தான் அவர்களை காபாவில் நடைபெறும் அடுத்த போட்டியில் வீழ்த்த முடியும்.

நம்முடைய நாட்டில் யாராவது நன்றாக விளையாடவில்லையெனில் உடனே அவரை நீக்க வேண்டும் தோல்வியை சந்தித்தால் கேப்டன்ஷிப் பறிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுவது வேடிக்கையான விஷயமாகும். 140 கோடி மக்கள் இருந்தால் இதுதான் பிரச்சினை. ஏனெனில் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் அவர்கள் ஒவ்வொருவரும் வல்லுனர்களாக உருவெடுக்கிறார்கள்" என்று கூறினார்.


Next Story