ஒளிச்சேர்க்கையை ஆராய்ந்தவர்..!
வேதியியல் அறிஞர் மெல்வின் எல்லிஸ் கால்வின் 1911-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள செயின்ட் பால் நகரில் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு வேதியியல் மற்றும் இயற்பியலில் அதிக ஆர்வம். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மிச்சிகன் சுரங்க தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வேதியியல், கனிமவியல், புவி அமைப்பியல், தொல்லுயிர் படிம உயிரியல், சிவில் பொறியியல் ஆகிய பாடங்களை கற்றார்.
1931-ல் பட்டம் பெற்றார். பிறகு மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த நான்கு ஆண்டுகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் குறித்து ஆராய்ந்தார். பின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராகச் சேர்ந்தார். 1947-ம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அங்கே ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியவர் களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
சூரிய ஒளியின் மூலம் உணவு தயாரிக்க தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது கார்பன் டை ஆக்ஸைடு, குளுக்கோஸாக மாறும் உயிரி வேதியியல் வினையின் சுழற்சியைக் கண்டறிந்தார். மேலும் ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை இந்த மூவர் குழு கண்டறிந்தது. இதற்கு 'கால்வின் சுழற்சி' என்று பெயரிடப்பட்டது. ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக இவருக்கு 1961-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கால்வின் தனது ஆராய்ச்சிகள் குறித்து 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 1980-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர், அதன் பிறகும் 16 ஆண்டுகள் தன் குழுவினருடன் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். பல விருதுகள், பதக்கங்கள் பெற்றார். லண்டன் ராயல் சொஸைட்டி இவரை கவுரவமிக்க அறிவியல் உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. வாழ்நாள் முழுவதும் அறிவியல் துறைக்கான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட மெல்வின் கால்வின், 1997-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி மறைந்தார்.