பருவகால மாற்றத்தின்போதும் தட்பவெப்பம், காற்றின் ஈரப்பதம், உணவு பொருட்களின் தன்மை ஆகியவற்றின் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
இதைத் தவிர்க்க பருவகால மாற்றத்தின்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதைப் பற்றிய தகவல்களை காண்போம்.
வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள் ஆகியவற்றை வெந்நீரில் நனைத்து சுத்தப்படுத்த வேண்டும். தலையணைகளை தூசு இல்லாத உறைகளால் மூடி வைக்க வேண்டும்.
நீர்க்கசிவுகள் மற்றும் பாக்டீரியாக்கள், பூச்சிகள் எளிதில் உருவாகும் இடங்கள் மற்றும் ஏ.சி. இயந்திரங்களையும் ஆரம்ப நிலையிலேயே சுத்தப்படுத்த வேண்டும்.
உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது.
புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழு தானியங்கள், மீன் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்து பருவகாலத்திலும் தினமும் காலையில் கிரீன் டீ பருகலாம். இதில், இயற்கையான ஆன்டி ஹிஸ்டமின்கள் உள்ளன. இவை ஒவ்வாமையால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைக்கும்.
மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், கீரைகள், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மசாலா பொருட்கள், காரமான உணவுகள், பால் பொருட்கள், சாக்லெட், சிவப்பு இறைச்சி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.