திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.
2-ம் திருநாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
தங்க சப்பரத்தில் சுவாமி : சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
இரவு சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
சூரசம்ஹாரம் : 6-ம் திருநாள் 7-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
சூரசம்ஹாரமான பின்பு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.