பொங்கல் கொண்டாட்டங்களும் அதன் சிறப்புகளும்.!!
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கும் பொங்கல் பண்டிகை ஜனவரி 17 ஆம் தேதி நிறைவடைகிறது.
முதலாவதாக வருவது தைப்பொங்கல். தை மாதத்தின் முதல் நாள் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறுவடை செய்த நெல்லை கொண்டு, புதுப்பானை, புதுஅடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள்.
பானையில் மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் கட்டப்பட்டிருக்கும். மேலும் காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்டு, கிழங்குகளை அவித்து, கரும்புகள் போன்றவை வைத்து சூரியனுக்கு படைக்கப்படும்.
இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல். பண்டைய காலத்தில் வேளாண்மைக்கு மிக அவசியமானது மாடுகள்தான். இந்தநாள் மாடுகளுக்கு சிறப்பு செய்து பொங்கல் வைத்து வழிபடும் நாளாகும்.
மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் உள்ள கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டி மகிழ்வார்கள்.
மூன்றாம் நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். இந்த நாளில்தான் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், ஜல்லிக்கட்டு போன்ற வீர சாகசப் போட்டிகள் நடத்தப்படும்.
இந்தப் பொங்கல் பண்டிகை அனைவருக்கும் எல்லா நலன்களையும் தரும் திருநாளாக கொண்டாடப்படுகிறது.