மலையேற்ற பிரியர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் இடங்கள்!

மலர் பள்ளத்தாக்கு: 'பிளவர்ஸ் வேலி' என்று அழைக்கப்படும் இந்த தேசிய பூங்கா உத்தரகாண்ட் மாநிலத்தில் மேற்கு இமயமலை அடிவார பகுதியில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அமைந்துள்ளது.
மழைக்காலத்தில் பூக்கும் பூக்கள் மனதை பரவசப்படுத்தும். இந்த தேசியப் பூங்காவில் பல வகையான கரடிகள், பனி சிறுத்தைகள், நீல நிற ஆடுகள் உட்பட பல அரிதான விலங்கு களை காணலாம்.
துத்சாகர் நீர்வீழ்ச்சி: இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகிலுள்ள பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது மழைக்காலத்தில் கண்கவர் காட்சியாக மாறிவிடும்.
பசுமையான காடுகளின் வழியாக மலையேற்றம் செய்தால் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். எனினும் இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயிலில் இருந்து நீர்வீழ்ச்சியின் அழகை ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக அமையும்.
ஆகும்பே: கர்நாடக மாநிலத்திலுள்ள சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இது 'தென்னிந்தியாவின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பருவமழை காலத்தின்போது அதிக மழை பொழியும் இடமாக விளங்குகிறது.
இதன் புவியியல் அமைப்பு அழகிய இயற்கைக்காட்சிகளால் சூழப்பெற்றது. இந்த பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. அதனால் மலையேற்றம் செய்பவர்களுக்கு உற்சாகமான சூழலை கொடுக்கும்.
செம்ப்ரா சிகரம்: இது கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மலைகளுள் ஒன்று. வயநாடு மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் (6,890 அடி) உயரத்தில் அமைந்துள்ளது
இந்த மலையேற்ற சிகரத்திற்கு பயணிப்பது மனதை மயக்கும் அனுபவத்தை கொடுக்கும். பருவ மழை தூறலும், கண்ணுக்கெட்டிய தூரம் தென்படும் பசுமையும் அந்த இடத்தை சொர்க்கபுரியாக மாற்றி இருக்கின்றன.
குத்ரேமுக்: இது கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள மலைத்தொடராகும். கர்நாடகாவின் 2-வது மிக உயர்ந்த சிகரமாகவும் இது விளங்குகிறது.
அடர்ந்த காடுகள், மழைக்காலங்களில் பனி மூடிய பாதைகள் என இங்கு மலையேற்ற பயணம் செய்வது திரிலிங்கான அனுபவத்தை கொடுக்கும். இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் விளங்குகிறது.