குறைந்த பட்ஜெட்டில் வால்பாறைக்கு ஒரு விசிட் போடுங்க..!!
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரே கோடை வாசஸ்தலம், வால்பாறை. 1850-ம் ஆண்டுகளில் கார்வர் மார்ஷ் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்டது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேயிலை தொழிலை சார்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்த வால்பாறை மலைப்பகுதி தற்போது முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.
நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை : இது, வால்பாறையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த காட்சி முனை பகுதியில் இருந்து பார்க்கும் போது தமிழக-கேரள வனப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களும், இயற்கை காட்டருவிகளும் தெரியும்.
கருமலை பாலாஜி கோவில்: வால்பாறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலை பக்தர்கள் தென் திருப்பதி என்று அழைக்கிறார்கள். கோவில் மலை உச்சியில் இருப்பதால் நடந்து தான் செல்ல வேண்டும். செல்லும் வழியில் காடுகளின் அழகை ரசிக்கலாம்.
கருமலை வேளாங்கண்ணி மாதா தேவாலயம்: இது வால்பாறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மலை உச்சியில் உள்ளது. இங்கும் நடந்துதான் செல்ல வேண்டும். கத்தோலிக்க திருச்சபை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் ஆலயமாக திகழ்கிறது.
சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி: வால்பாறையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நீர்விழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி இல்லை. பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்துச் செல்லலாம்.
நீராறு அணை: வால்பாறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணையை பார்த்து ரசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றனர்.
சோலையாறு அணை: இது வால்பாறை பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியோரம் முழுவதும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக இருப்பதால் பார்த்து ரசித்துக் கொண்டே அணையை சென்றடையலாம்.
இருவாச்சி காட்சி முனை (ஹார்ன்பில் வியூபாயிண்ட்): பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த காட்சி முனையில் இருந்து இருவாச்சி பறவைகள் பறப்பதையும், அழகான மலைப்பகுதியையும் கண்டு களிக்கலாம்.
கவர்க்கல்: வால்பாறையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் கவர்க்கல் உள்ளது. இந்த பகுதி பாலக்காட்டு கணவாய்க்கு இடைவெளியில் அமைந்து உள்ளது. இங்கு பனிமூட்டமாக காட்சி அளிக்கும். அந்த காட்சியை காண்பது அலாதி ஆனந்தத்தை தரும்.