பெங்களூருக்கு ஒரு விசிட் போடுங்க..!

உலக அளவில் தொழில்நுட்ப துறையில் பிரசித்திபெற்று விளங்கும் பெங்களூரு நகரத்தில் ஏராளமான சுற்றுலா தலங்களும், பாரம்பரிய வரலாற்றை பறைசாற்றும் நினைவுச்சின்னங்களும் உள்ளன.
கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளை காண விரும்புவோருக்கு பெங்களூருவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.
இஸ்கான் கோவில் : பெங்களூரு ராஜாஜிநகர் முதலாவது பிளாக் மைசூரு சாண்டல் சோப்பு தயாரிப்பு நிறுவனம் அருகே அமைந்துள்ளது இஸ்கான் கோவில். இதன் கட்டிட கலை சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும்.
பெங்களூரு கோட்டை : இந்த கோட்டை 1,537-ம் ஆண்டு வரை மணல் கோட்டையாக இருந்தது. பின்னர் 1,761-ம் ஆண்டு பாறைகளால் கட்டப்பட்டது. இதன் அழகை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பெங்களூரு அரண்மனை : பண்டைய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஓவியங்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளடக்கிய பெங்களூரு அரண்மனை 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பண்டைய கால மன்னர்களின் வியத்தகு வாழ்க்கை முறையை ரசிக்கலாம்.
சுதந்திர பூங்கா : மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது சுதந்திர பூங்கா. இது முன்பு சிறைச்சாலையாக செயல்பட்டு வந்தது. தற்போது சுற்றுலா பயணிகள் தேர்விடமாகவும் விளங்குகிறது.
விதானசவுதா: கர்நாடகத்தின் அதிகார மையமாக திகழும் விதானசவுதா 1956-ம் ஆண்டு கட்டப்பட்டது. பெங்களூருவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இதனை கட்டியது ஒரு தமிழர் ஆவார். பெங்களூருவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் விதானசவுதாவை காணாமலும், அதன் முன்பு நின்று புகைப்படம் எடுக்காமலும் செல்ல மாட்டார்கள்.
திப்பு சுல்தான் சம்மர் பேலஸ் : திப்பு சுல்தான் சம்மர் பேலஸ் 1791-ம் ஆண்டு கட்டப்பட்டது. அரண்மனையின் தூண்கள் மற்றும் கட்டிடக்கலை காண்போரை வியக்க வைக்கும். கோடை காலத்தில் திப்பு சுல்தான் இங்கு தான் ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது.
லால்பாக் பூங்கா : பெங்களூருவில் சுமார் 240 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் லால்பாக் பூங்காவில் அரிய வகை பூச்செடிகள், மரங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்ட ஏராளமான வியத்தகு அம்சங்கள் உள்ளன.