சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி.!

மூளையில் இருந்து சமிக்ஞைகளை உடலின் ஒட்டுமொத்தப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது நரம்புகள்தான்.
ஒரு நரம்புக்குள்ளேயே மூன்று வகையான நரம்புப் பிரிவுகள் உள்ளன.
இயக்க நரம்புகள்:- மூளையில் இருந்து சமிக்ஞைகளை எடுத்துச்சென்று சதைகளை இயங்கச்செய்யும்.
உணர்ச்சி நரம்புகள்:- தோல், சவ்வு, மூட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உணர்வுகளை எடுத்துக்கொண்டு மூளைக்குச் செல்லும்.
தன்னியக்க நரம்புகள் : வியர்வைச் சுரப்பிகள், குடல் இயக்கங்கள், மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றம் ஆகிய முக்கிய செயல்களைச் செய்யும்.
இந்த நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது.
நரம்புத்தளர்ச்சியின் அறிகுறிகள்:
நம் உடலிலேயே பாதத்தில் உள்ள நரம்புகள் தான் நீளமானவை. எனவேதான் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் முதலில் பாதத்தில் தொடங்குகிறது.
காலில் எரிச்சல், கால் விரல் நுனிகளில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த உணர்வு சிலருக்கு இரண்டு பாதங்களிலும் தொடங்கி மேல் நோக்கித் தொடைப்பகுதி வரை வந்த பிறகு, கைகளுக்குப் பரவக்கூடும்.
சிலருக்குப் பாதத்தில் மட்டும் உணர்ச்சி குறைந்து மதமதப்பு ஏற்படுகிறது. காலில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும். விரலில் உள்ள நகங்கள் பழுப்பு நிறமாக மாறி, பலமிழந்து உடையத் தொடங்கும்.
ஆனால் சிலருக்குத் திடீரென ஆரம்பித்து நடக்கக்கூட முடியாமல் போய்விடலாம். சிலருக்கு கைகளை ஊன்றி எழவோ, தோள்பட்டைக்கு மேல் கைகளைத் தூக்கவோ முடியாமல் போய்விடலாம்.