கண்டிப்பாக தெரிய வேண்டியவை... ஆச்சரியமூட்டும் எல்லை பகுதிகள்..!

இந்தியாவில் எல்லா வகையான நிலப்பரப்புகளும் காணப்படுகின்றன. வறண்டு கிடக்கும் பாலைவனங்கள், எல்லா நாளும் மழைப்பொழிவு நடைபெறும் பகுதிகள், பனி நிறைந்த இடங்கள் என நிலப்பரப்பில் இந்தியா வேறுபட்டு காணப்படுகிறது.
இந்த மாதிரியான புவியியல் மாற்றங்களை கொண்ட நம் நாட்டின் எல்லைப்பகுதிகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அப்படி நம் மனதிற்கு இதமூட்டும் எல்லைப்பகுதிகளை இந்த தொகுப்பில் காணலாம்...
தனுஷ்கோடி, தமிழ்நாடு (இந்தியா-இலங்கை)
தென்னிந்தியாவில் உள்ள இந்த இயற்கை அழகு நிறைந்த இடம் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒருபுறம் இந்தியப் பெருங்கடல், மறுபுறம் பரந்த வங்காள விரிகுடாவின் காட்சிகளை ரசிக்க முடியும்.
மோரே, மணிப்பூர் (இந்தியா-மியான்மர்)
மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கிழக்கு எல்லைக் கிராமம் மோரே. இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமானத் தமிழ் புழக்கத்தில் உள்ளது.
இவ்வூர் `தென்கிழக்காசியாவின் வாசல்’ என்றழைக்கப்படுகிறது. இங்கு சென்றால் இந்தியா-மியான்மர் பண்டமாற்று வர்த்தக முறையைப் பார்க்கலாம்.
வாகா எல்லை, பஞ்சாப் (இந்தியா-பாகிஸ்தான்)
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒரே சாலை வழி எல்லையாக வாகா எல்லை உள்ளது. இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் தினமும் மாலையில் கம்பீரமான முறையில் நிகழ்த்தும் கொடி இறக்க நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரபலமாகும்.
இரு நாட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் அங்கு கூடுகின்றனர். எனவே, இரு நாட்டிலும் இது சிறந்த சுற்றுலா மையமாகவும் திகழ்கிறது.
நாது லா கணவாய், சிக்கிம் (இந்தியா-சீனா)
14 ஆயிரத்து 140 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நாது லா, இமயமலைப் பகுதியில் உள்ள உயரமான மலைப்பாதையாகும்.
இது இந்தியாவின் சிக்கிம் மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு இடையே எல்லையாக செயல்படுகிறது. நாது லா கணவாய் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள மூன்று வணிகப்பாதைகளுள் ஒன்றாக திகழ்கிறது.
ஜெய்கான், மேற்கு வங்காளம் (இந்தியா-பூடான்)
பூடான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இது மலை மற்றும் சரிவான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
இங்கு மலையடிவாரத்திலிருந்து பல ஓடைகள் வழியாக பாய்ந்தோடும் நீர் நதியில் கலக்கிறது. ஆண்டு முழுவதும் மழையைப் பெறும் இடமாகவும் ஜெய்கான் விளங்குகிறது.
டாவ்கி, மேகாலயா (இந்தியா-வங்காள தேசம்)
இது மேகாலயாவின் மேற்கு சைந்தியா மலை மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.
டாவ்கி இந்தியாவிற்கும், வங்காளதேசத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் அழகைக் காண உலகம் முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
ரான் ஆப் கட்ச், குஜராத் (இந்தியா-பாகிஸ்தான்)
கட்ச் பாலைவனம் என அழைக்கப்படும் ரான் ஆப் கட்ச் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்திலும், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலத்திலும் பரந்து விரிந்து உள்ளது.
இந்த இடம் உலகின் மிகப் பெரிய உப்பு பாலைவனம் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது. புல்வெளிப் பகுதிகள் அதிகமாக காணப்படும் இங்கு மான்கள் மற்றும் ஆசிய காட்டுக் கழுதைகள் அதிகமாக வாழ்கின்றன. வெள்ளை பாலைவனத்தின் அழகை அனுபவிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக இந்த பகுதி திகழ்கிறது.