மழைக்காலத்தில் நம்மை அதிகம் பாதிக்கும் 'மெட்ராஸ் ஐ'..!
பருவநிலை மாற்றம் காரணமாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருகிறது. மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் பரவுவது வழக்கம்.
இந்த கண் நோய் பிரச்சினை குழந்தைகள், முதியவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது கண்களில் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்று ஏற்படுவதால் 'மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது.
இந்த கண் நோய் பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசுக்கள் வாயிலாகவும் பரவக்கூடும்.
மெட்ராஸ் ஐ' பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவும்.
'மெட்ராஸ் ஐ' கண் நோயானது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமான தொற்று நோய் தான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் : கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை 'மெட்ராஸ் ஐ' நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் 'மெட்ராஸ் ஐ' பிரச்சினை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.