குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் `குலசேகரன்பட்டினம்' என அழைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தசரா திருவிழாவையொட்டி முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் காளி பக்தர்கள் குழு சார்பில் காளி பூஜை நடத்தப்படும்.
இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பொதுவாக சிவன் சன்னதி தனியாகவும், அம்மன் சன்னதி தனியாகவும்தான் கோவிலில் இருக்கும். ஆனால் குலசையில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் உடன் ஒரே பீடத்தில் இருந்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
குலசை முத்தாரம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.
கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை… என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால்தான் விரதமிருந்து வேடமணிந்து அம்பிகையின் அருளைப் பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.