இந்தியாவில் இப்படி ஒரு நதியா...காற்றில் மிதப்பது போன்ற ஒரு பயணம்!
இந்தியாவின் தூய்மையான நதிகளுள் ஒன்றாக விளங்கும் இது ஆசியாவிலேயே தூய்மையான நதியாகவும் வர்ணிக்கப்படுகிறது. இந்த நதியின் பெயர் உம்ங்கோட்.
இது டாவ்கி நதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நதி மேகாலயா மாநிலத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. வங்காள தேசத்தையொட்டி இந்தியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம்தான் இந்த நதியின் தாயகம்.
நதியை போலவே இந்த கிராமமும் தூய்மைக்கு பெயர் பெற்றது. அதனால்தான் ஆசியாவின் தூய்மையான கிராமமாகவும் அறியப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் உள்ள ஷில்லாங் சிகரத்தின் கிழக்கு பகுதியில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறது.
நதிக்குள் இருக்கும் பாறைகள், கூழாங்கற்கள், மீன்கள் மற்ற நதிகளில் காட்சி அளிப்பதை விட பிரகாசமாக கண்களுக்கு புலப்படும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது பச்சை நீல நிறத்தில் இந்த நதி அழகுற காட்சி அளிக்கும்.
தண்ணீரின் பளிச் தன்மை காரணமாக படகின் நிழல் ஆற்றில் தெரிவதும் கூட தெளிவாக இருக்கும். படகுகள் காற்றில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த நதியில் படகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அமைதியாக ஓடும் இந்த நதி 82 கி.மீ. தூரம் தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது
உம்ங்கோட் நதிக்கு அருகில் உள்ள முக்கியமான நகரம் டவ். அங்குள்ள பாலம், அண்டை நாட்டின் இனிமையான காட்சிகள் மற்றும் நதியை சூழ்ந்திருக்கும் பசுமை கண்களுக்கு விருந்தளிக்கும்.