மழைக்காலத்தில் அதிகமாக நம்மை தாக்கும் நோய்த் தொற்றுகளை தடுப்பது எப்படி?
மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுப்புற சூழல் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மிகுந்த கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
டைபாய்டு: சுகாதாரமற்ற தண்ணீர், சுகாதாரமற்ற முறையில் உண்ணும் உணவுகள் மூலம் ஏற்படுகிறது, இது "சால்மோனெல்லா டைபை" என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
டைபாய்டு நோய் வராமல் தடுக்க, சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும், உணவில் சீரான சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும், நன்கு சமைத்த உணவை உண்ண வேண்டும்.
சுவாச நோய் தொற்றுகள்: மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும்,இன்புளூயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் நோய் சரியாகும் வரை நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
லெப்டோஸ்பைரோசிஸ்: லெப்டோஸ்பைரோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று மிகக்குறைவாக அறியப்பட்ட நோய் இந்நோயில் உடல் வலி, தலைவலி,தசை சோர்வு,காய்ச்சல் போன்ற தீவிர அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.
லெப்டோஸ்பைரோசிஸ் தடுக்க, விலங்குகளின் சிறுநீரால் மாசுபடக்கூடிய நீர் அல்லது மண்ணைத் தொடக்கூடாது. தேங்கியுள்ள வெள்ளத்தில் நடப்பதையோ, நீந்துவதையோ தவிர்க்க வேண்டும்.
உள்நாக்கு அழற்சி: மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர், மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது.
இதை தடுக்க இளஞ்சூடான வெந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். உப்பு, மஞ்சள் கலந்து அந்த நீரை, தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளிக்க வேண்டும்.