குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும். எனவே உடல் சமநிலையை பேணுவதற்கும், நோய்களைத் தடுக்கவும் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை காண்போம்.
இஞ்சி : இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எளிதாக விரட்டலாம். குளிர் காலங்களில் எத்தகைய நோயையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது.
பாதாம் : பாதாமில் மெக்னீசியம், புரதம், ரிபோப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
மஞ்சள்: மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பப்பெற்றது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டது. குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உணவில் மஞ்சள் இடம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பூண்டு : இது வைட்டமின் சி, பி, துத்தநாகம் மற்றும் போலேட் போன்ற சத்துக்களின் கலவையாக விளங்குகிறது. மேலும் பூண்டில் ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.
பழங்கள்: ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா மற்றும் நெல்லிக்காய் போன்ற பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.
காய்கறிகள்: கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் முள்ளங்கி ஆகியவை வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளன, இவை உடலுக்கு வலிமை அளித்து சிறப்பாக இயங்க உதவுகின்றது.
மூலிகை டீ: குளிர்காலத்தில் சூடாக டீ, காபி பருகுவதற்கு மாற்றாக மசாலா டீ, கிரீன் டீ, லெமன் டீ, இஞ்சி டீ அல்லது வேறு ஏதேனும் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.