கோடைகாலத்தில், லேசாக குளிர்விக்கப்பட்ட கரும்புச்சாறுடன், எலுமிச்சை மற்றும் இஞ்சிச்சாறு கலந்து பருகினால், உடனடியாக உடல் புத்துணர்ச்சி அடைவதை நம்மால் உணர முடியும்.
கரும்புச்சாறு நாவிற்கு சுவையூட்டுவது மட்டுமில்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான மூலப்பொருளான சுக்ரோஸ், இயற்கையாகவே கரும்புச்சாற்றில் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
காலை உணவோடு ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகினால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். காபிக்கு மாற்றாக கரும்புச்சாறு பருகுவது உடலுக்கு நல்லது.
கரும்புச்சாற்றில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், வயிற்றின் அமில காரத் தன்மையை சமநிலைப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும்.
கரும்புச் சாற்றில் கால்சியம், மாங்கனீசு, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
இதில் உள்ள பிளேவனாய்டு, புற்றுநோயை உண்டாக்கும் வீரியம் மிக்க செல்களுக்கு எதிராகப் போராடும். வாரத்துக்கு 3 முறை ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும்.
கரும்புச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பற்களை வலுப்படுத்தி, பற்சிதைவைத் தடுக்கும். தொடர்ந்து கரும்புச்சாறு பருகி வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
கரும்புச் சாற்றில் உள்ள டையூரிட்டிக் பண்புகள், உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கழிவுகள் மற்றும் தொற்றுகளை நீக்கும்.