மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை எதிர்த்து போட்டியிடும் லிங்காயத் சாமியார்


மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை எதிர்த்து போட்டியிடும் லிங்காயத் சாமியார்
x

பா.ஜ.க. வேட்பாளரான பிரகலாத் ஜோஷியை மாற்றவேண்டும் என தார்வாட் பகுதியைச் சேர்ந்த சாமியார்கள் வலியுறுத்தினர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் ஷிரஹட்டி பக்கிரேஷ்வர் மடத்தின் தலைவர் பகிரா திங்கலேஷ்வர் ஸ்வாமி. வீரசைவ லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிரபல சாமியாரான இவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தார்வாட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

அந்த தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான பிரகலாத் ஜோஷியை கடுமையாக விமர்சித்துள்ள அவர், வீரசைவ-லிங்காயத் மற்றும் பிற சமூகங்களை பிரகலாத் ஜோஷி ஒடுக்குவதாகவும், லிங்காயத் மடங்களை தவறாகப் பயன்படுத்தி அவமரியாதையை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக பகிரா திங்கலேஷ்வர் ஸ்வாமி மேலும் கூறியதாவது:-

தேசிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், தார்வாட் தொகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், இரண்டு கட்சிகளும் மேட்ச் பிக்சிங் போன்ற தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கருதுகின்றனர். இது அனைவருக்கும் தெரியும். தார்வாட் தொகுதி மக்களுக்கு இரண்டு தேசிய கட்சிகளும் துரோகம் செய்துவிட்டன.

தார்வாட் வாக்காளர்கள் என்னை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். இரு தேசிய கட்சிகள் மற்றும் சுயநல அரசியல்வாதிகளுக்கு எதிரான தர்ம யுத்தம் இது. மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வருகிறேன்.

தர்மத்தில் அரசியல் கூடாது, ஆனால் அரசியலில் தர்மம் இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். தேர்தலுக்கு பிறகும் இதை பின்பற்றுவேன். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு ஆதரவாக வாழ்நாள் இறுதி வரை எனது தர்ம யுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தார்வாட் பகுதியைச் சேர்ந்த சில சாமியார்கள், குறிப்பாக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சாமியார்கள் கடந்த மாதம் 27-ம் தேதி ஹூப்பள்ளியில் திங்கலேஷ்வர் ஸ்வாமி தலைமையில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, தார்வாட் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத் ஜோஷியை மாற்றவேண்டும் என கட்சி தலைமையை கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்கு கடந்த மாதம் 31-ம் தேதிவரை அவகாசம் கொடுத்தனர்.

அக்கூட்டத்தில், வட மாநிலங்களைப் போன்று, தெற்கிலும் சாமியார்கள் அரசியல் களத்தில் பணியாற்றி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தார்வாட் தொகுதியில் உள்ள வாக்காளர்களில் லிங்காயத் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஷி ஒரு பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாமியாரின் கருத்துக்களை ஒரு ஆசீர்வாதமாகவே கருதுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் தவறான புரிதல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெளிவுபடுத்த முயற்சிப்பதாகவும் கூறி உள்ளார்.

கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 7-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தார்வாட் தொகுதியும் ஒன்று.


Next Story