நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது - பிரதமர் மோடி
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாட்னா,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பீகார் ஹஜிபூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சிரங் பாஸ்வானை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் ஆட்சியை பிடித்தால் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை பறிக்க தயாராகி வருகின்றனர். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியான ஒருவர் (லாலு பிரசாத்) சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கூறினார். அப்படியென்றால், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோரிடமிருந்து இடஒதுக்கீட்டை அவர்கள் பறித்துவிடுவார்கள். ஆனால், நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது பீகாரில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்துவிட்டது. மத்தியிலும், பீகாரிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பீகாரில் 1,500 கிலோமீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அரசால் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகளால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. அதேவேளை, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் ஊழலில் மூழ்கியுள்ளனர். அவர்கள் குடும்ப அரசியலை ஊக்குவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.